உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / படிப்படியாக விலகும் பார்லிமென்ட் செக்யூரிட்டி சர்வீஸ் சத்தமில்லாமல் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்

படிப்படியாக விலகும் பார்லிமென்ட் செக்யூரிட்டி சர்வீஸ் சத்தமில்லாமல் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்

பார்லிமென்ட் வளாகத்திற்குள், எம்.பி.,க்களின் பாதுகாப்பு உட்பட அவர்களுக்கான உதவிகளை செய்து வரும் பார்லிமென்ட் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், படிப்படியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது கடந்த ஆண்டு டிசம்பர் 13ல், லோக்சபாவுக்குள் கலர்புகை குண்டுவீச்சு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பார்லிமென்ட் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.பார்லிமென்ட்டில், பலகட்ட பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும், ஒவ்வொரு வகையிலான சோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்தப் பணிகளில், டில்லி போலீஸ் மற்றும் பி.எஸ்.எஸ்., எனப்படும், பார்லிமென்ட் செக்யூரிட்டி சர்வீஸ் அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். பார்லிமென்ட்டின் வெளிவட்டம் மற்றும் உள்வட்ட நுழைவு வாயில்களில் நுழைகிற அனைவரையும், அடையாள அட்டை, நுழைவு அனுமதிச்சீட்டு ஆகியவற்றை வாங்கி சரிபார்த்து உள்ளே விடுவது இவர்களது பணி.அனுமதிக்கப்பட்டவர்களை, 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக சோதனை செய்வது, கூட்டத்தொடர் நடக்கும் போது ஆர்ப்பாட்டம் செய்யும் எம்.பி.,க்களை ஒழுங்கு படுத்தல், சபை நடவடிக்கைகளை பார்வையிட வரும் பொதுமக்களை சரிபார்த்து, உள்ளே அனுப்பி, கடைசி வரை கண்காணித்து வெளியே அனுப்புவது இவர்கள் பொறுப்பு. குறிப்பாக, லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளின் லாபி வரையில் செல்ல இவர்களுக்கு அதிகாரம் உள்ளது. மொத்தத்தில், பார்லிமென்ட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பு என ஒட்டுமொத்த சிஸ்டத்தின், முதுகெலும்பாக இந்த பார்லிமென்ட் செக்யூரிட்டி அலுவலர்கள் உள்ளனர். மொத்தம் 800 பேர் பணியில் உள்ளனர். இவர்கள்தான், தற்போது பணியிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் பணியாற்றி வந்த இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளிவட்டம், உள்வட்டம் என எல்லா இடங்களிலுமே, சி.ஐ.எஸ்.எப்., போலீசார் தென்படுகின்றனர். வாளகத்தின் முக்கியமான இடங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சீருடை இல்லாத சிலரிடம், கைத்துப்பாக்கி இருப்பதையும், காண முடிகிறது.ஏற்கனவே, பார்லிமென்ட் வெளியடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த, டில்லி போலீசார் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டனர். இப்போது பார்லிமென்ட் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் விலக்கப்பட்டுள்ளனர்.வரும் ஜுன் 4 க்கு பிறகு, 18வது லோக்சபா பொறுப்பேற்றதும், புதிய எம்.பி.,க்களை, வரவேற்க பார்லிமென்ட்ட செக்யூரிட்டி அலுவலர்கள் இருப்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.பணியில் இருந்து விடுவிக்கப்படும் அலுவலர்களுக்கான புதிய பணி குறித்து, இன்னும் தெளிவாக முடிவெடுக்கப்படவில்லை.இருப்பினும், சிலருக்கு குமாஸ்தா பணிகள் வழங்கப்படலாம் என்றும், விருப்பம் உள்ளவர்களுக்கு பணி ஓய்வு அளிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாறு ஆகிறது

'வாட்ச் அண்டு வார்டு'கடந்த, 1929, ஏப்., 8ல், லோக்சபா சேம்பருக்குள் குண்டு வீசப்பட்டதை அடுத்து, அப்போதைய மத்திய லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி தலைவர் விதல்பாய் படேல், அதே ஆண்டு செப்., 3ல், ஒரு குழு அமைத்தார். அதற்கு, 'வாட்ச் அண்டு வார்டு கமிட்டி' என, பெயரிடப்பட்டது. வெறும் 21 பேர் கொண்ட அந்த குழு, பார்லி., வளாக கண்காணிப்பில் ஈடுபட்டது. பல்வேறு கட்டங்களில், பணிகள் பிரிக்கப்பட்டு, படிப்படியாக விரிந்து, கடந்த 2009 ஏப்ரல் 15ல் 'பார்லிமென்ட் செக்யூரிட்டி சர்வீஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.-நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ