உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் பூஜையால பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் பூஜையால பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

புதுடில்லி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் பூஜையில், பிரதமர் மோடி பங்கேற்றது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பதாகவும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும், பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில், நேற்று முன்தினம் நடந்த விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக அவரது வீட்டுக்கு சென்ற பிரதமரை, தலைமை நீதிபதியும், அவரது மனைவி கல்பனா தாசும் வரவேற்றனர். தலைமை நீதிபதி குடும்பத்தினருடன் சேர்ந்து பிரதமர் மோடி கற்பூர ஆரத்தி காண்பித்து விநாயகரை வழிபடும் புகைப்படங்கள் வெளியாகின. இதை எதிர்க்கட்சியினரும், சில வழக்கறிஞர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கண்டனம்

சிவசேனா உத்தவ் பிரிவின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், “அரசியல் சாசனத்தின் பாதுகாவலர்கள் வீட்டுக்கு அரசியல்வாதிகள் செல்வது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும். “மஹாராஷ்டிராவின் தற்போதைய அரசு குறித்த எங்களின் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் விசாரணைக்கு வர இருக்கிறது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதியாக இருக்கிறார். “இப்போது எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கவலை ஏற்பட்டு உள்ளது. அந்த வழக்கில் இருந்து விலகி கொள்வது பற்றி தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சமரசம் செய்துஉள்ளார்.அவர் மீதான அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.“விநாயகர் பூஜை என்பது தனிப்பட்ட விஷயம், அங்கு கேமரா புடைசூழ பிரதமர் சென்று வழிபட்டது மிகவும் தவறான செய்தியை வெளி உலகுக்கு அளித்துள்ளது,” என, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு நேற்று பதில் அளித்த பா.ஜ., - எம்.பி.,யும், தேசிய செய்தி தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறியதாவது:நம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பிரதமர் சந்தித்ததை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க எம்.பி., இல்ஹான் ஒமரை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சந்தித்ததை கண்டிக்காதது ஏன்?மதச்சார்பற்றவர்கள் என அழைக்கப்படும் சிலர் இத்தகைய மரியாதைக்குரிய சந்திப்புகளை எதிர்க்கின்றனர். ஆனால் இந்த மாபெரும் ஜனநாயகத்தின் முதிர்ச்சி, இதுபோன்ற முதிர்ச்சியற்ற மற்றும் குழந்தைத்தனமான பேச்சுகளைத் புறந்தள்ளும் அளவுக்கு உயர்ந்தது.பிரதமர் - தலைமை நீதிபதியின் மரியாதை நிமித்தமான சந்திப்பு, நம் அழகிய ஜனநாயகத்தை பிரதிபலிக்கிறது. இது மற்ற நாடுகளை விட இந்தியாவை சிறந்ததாக்குகிறது.

மரியாதை

எதிர்க்கட்சியினருக்கு என்ன வேண்டும்? ஜனநாயகத்தின் வெவ்வேறு துாண்கள் சந்திக்க முடியாதா, ஒன்றுசேர முடியாதா, அவர்கள் நண்பர்களாக இருக்க வேண்டாமா? அவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டுமா? அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டாமா? அவர்கள் கைகுலுக்கக் கூடாதா? அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருக்க வேண்டாமா?இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி எழுப்புவதா?'

சிவசேனா ராஜ்யசபா எம்.பி., மிலிந்த் தியோரா கூறியதாவது:தீர்ப்புகள் தங்களுக்குச் சாதகமாக வரும்போது, உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை எதிர்க்கட்சிகள் போற்றுகின்றன. அதுவே, அவர்கள் நினைத்தது நடக்காதபோது, நீதித்துறை சமரசம் செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.தலைமை நீதிபதியின் நம்பகத்தன்மையை எதிர்க்கட்சிகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த முயற்சி பொறுப்பற்றது மட்டுமல்ல, நீதித்துறையின் நேர்மைக்கும் கேடு விளைவிப்பதுடன் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

பதிலடி புகைப்படம்!

பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர் ெஷசாத் பூனவல்லா, 'எக்ஸ்' சமூக வலைளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுளார். கடந்த, 2009ல், காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது வீட்டில் நடந்த இப்தார் விருந்துக்கு வந்த, அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை வரவேற்பது போன்ற புகைப்படம் அதில் உள்ளது. மேலும், அந்த புகைப்படத்தில், 'இப்தார் விருந்தில் அப்போதைய பிரதமரும், அப்போதைய தலைமை நீதிபதியும் பங்கேற்றபோது மட்டும் நீதித்துறை பாதுகாப்பாக இருந்ததா' என, ெஷசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 13, 2024 07:28

தேசவிரோதிகளுடன் ராகுல் குலாவி வருகிறான் .... அதை மறைக்க இப்படி திசை திருப்பல் ....... காங்கிரஸ், கம்மிகளுக்கு அப்படியே திராவிட மாடல் குணம் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை