சாம்ராஜ் நகரில் நிலங்களின் மதிப்பு கிடுகிடு உயர்வு
சாம்ராஜ்நகர்: தமிழகம் - கர்நாடகா எல்லையோர மாவட்டமான சாம்ராஜ்நகரில் கொடிகட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழிலால், நிலத்தின் மதிப்பு விண்ணை எட்டியுள்ளது.பொதுவாக நகரங்கள் வளர்ச்சி அடையும்போது, கூடவே நிலத்தின் விலையும் அதிகரிப்பது வழக்கமே. ஆனால், தமிழகம் - கர்நாடகாவின் எல்லையோர மாவட்டமான, சாம்ராஜ்நகரில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சாம்ராஜ்நகரில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமத்தில், ஒரு ஏக்கர் நிலம் 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு ஏக்கர் நிலம் 20- முதல் 25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. யாரும் கவனம் செலுத்தாத பகுதிகளில் கூட, தற்போது ஆறு மடங்கு விலை ஏறியுள்ளது.கேரளாவை சேர்ந்த பணக்காரர்கள், வியாபார நோக்கத்திற்காக அதிக நிலங்களை வாங்குவதால், நிலத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களால், நிலம் வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.முன்பு, ஆர்.டி.சி., எனும் நில உரிமை பத்திரம் வைத்திருப்போர் மட்டும், வருவாய் நிலங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தோர், வியாபார நோக்கத்திற்காக நிலங்களை வாங்கிக் குவிக்கின்றனர்.மாவட்ட வணிகர் சங்க தலைவர் பிரபாகர் கூறுகையில், ''விவசாய நிலங்கள், பிளாட் ஆக மாற்றப்படுகின்றன. செல்வந்தர்கள் வியாபார நோக்கத்திற்கு, நிலம் வாங்குவதால், விலை அதிகமாகிறது. இதனால், நடுத்தர குடும்பத்தினர் வீடு கட்டும் கனவு, கனவாகவே போய் விடும் நிலை உருவாகி உள்ளது,'' என்றார்.