உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருந்துகள் வழங்காமல் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல சதி நடக்கிறது

மருந்துகள் வழங்காமல் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல சதி நடக்கிறது

புதுடில்லி, 'சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின், மருத்துவ ஆலோசனைகள் மறுக்கப்படுவதன் வாயிலாக, அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது' என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குற்றச்சாட்டு

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, வரும் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு வீட்டில் சமைத்த உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ஜாமின் பெறும் வகையில், உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்க, கெஜ்ரிவால் இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதாக சமீபத்தில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை அவரது ஆம் ஆத்மி கட்சி மறுத்தது. இந்நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அங்கேயே அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரம் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:கெஜ்ரிவால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 'டைப்-2' நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்குமாறும், குடும்ப மருத்துவரிடம் 'வீடியோ கான்பரஸ்' வாயிலாக ஆலோசனை கேட்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதை சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.

அனுமதி

இதன் வாயிலாக, சிறையிலேயே அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது. இந்த விவகாரத்தில் திஹார் சிறை நிர்வாகம், பா.ஜ., மற்றும் மத்திய அரசின் பங்கு உள்ளது. நீரிழிவு நோயால், கெஜ்ரிவாலின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம்அடைந்து வருகிறது. உடலின் சர்க்கரை அளவை பரிசோதிக்க இயந்திரத்தை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சிறை நிர்வாகம் அதை மறுக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் வெளியே வரும் போது, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களுக்காகவே அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வுக்கு ரூ.60 கோடி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது:மதுபான ஊழலின் மன்னன் என சரத் ரெட்டி குறித்து அமலாக்கத் துறை தன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. அவர் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ.,வுக்கு, 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பின், அவர் சார்பில் 2022ம் ஆண்டு நவ., 15ல் பா.ஜ.,வுக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டது. ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின், கடந்த ஆண்டு மே 8ல், ஜாமினில் வந்த சரத் ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அக்கட்சிக்கு 50 கோடி ரூபாய் அளித்துள்ளார். அதேபோல், கடந்த 2022ம் ஆண்டில், அவர் பா.ஜ.,வுக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் அவர் மீதும், பா.ஜ., மீதும் அமலாக்கத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் அற்பமானவை'

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:ஜாமின் பெறுவதற்காக சர்க்கரை அளவை அதிகரிக்க, அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு சாப்பிடுவதாக அமலாக்கத் துறை கூறுகிறது. அவரது உடல்நலத்தை கெடுக்க அவரே விரும்புவாரா? கைது செய்யப்படுவதற்கு முன், டாக்டர் அளித்த ஆலோசனையின்படி அவர் உணவு உட்கொள்கிறார். ஏப்., 8க்குப் பின் வீட்டில் இருந்து மாம்பழங்கள் அனுப்பப்படவில்லை. அமலாக்கத் துறையின் கருத்துகள் அற்பமானவை. அரசியல் நோக்கத்துடன் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, திஹார் சிறை அதிகாரிகள், டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனாவிடம், கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து அறிக்கை அளித்துள்ளனர். அதில், 'கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பே, இன்சுலின் செலுத்துவதை நிறுத்தி விட்டார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்