உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூகங்களின் ஓட்டுகளை நம்பியுள்ள மூன்று கட்சிகள்

சமூகங்களின் ஓட்டுகளை நம்பியுள்ள மூன்று கட்சிகள்

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளை, குறிப்பிட்ட சமுதாயங்களின் ஓட்டுகளே தீர்மானிக்கின்றன. இத்தேர்தலிலும், இச்சமுதாய ஓட்டுகளை கவர, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.கர்நாடகாவின் வட மாவட்டங்களில் லிங்காயத்துகளும்; பழைய மைசூரு பகுதியில் ஒக்கலிகர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம் முழுதும் எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர் இருந்தாலும், கல்யாண கர்நாடகா பகுதியில் இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.ஒக்கலிகர்கள், லிங்காயத்துகளின் ஆதிக்கம் இருந்தபோதும், பிற்படுத்தப்பட்ட குருபர் சமுதாயத்தை சேர்ந்த சித்தராமையா, 'சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் கூட்டமைப்பான அஹிந்தா' ஓட்டு வங்கியின் கோட்டையாக இருந்ததால், 2013, 2023ல் என இரண்டு முறை முதல்வராகி உள்ளார்.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் மட்டுமின்றி, ஒக்கலிகர், லிங்காயத் ஓட்டுகளும் காங்கிரசுக்கு கிடைத்தது. இதனால் 136 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

ஜாதி கணக்கெடுப்பு

நடப்பாண்டு ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, அதை அமல்படுத்துவதை அரசு ஒத்திவைத்தது. இதற்கு லிங்காயத், ஒக்கலிகர்களின் எதிர்ப்பே காரணம்.கடந்த 2018ல் கசிந்த அறிக்கையின்படி, இச்சமூகங்களின் மக்கள் தொகை குறைந்து உள்ளது. அரசு ஒதுக்கீடுகள், அமைச்சரவை பதவிகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் இவ்விரு சமூகத்தினரும் கணக்கெடுப்பு வெளியிடுவதை எதிர்த்தனர்.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சட்டசபை தேர்தலின் போது கைகோர்த்த லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, சித்தராமையா அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். இது, தேர்தலில் காங்கிரசை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பா.ஜ., - ம.ஜ.த.,

ம.ஜ.த.,வுக்கு பாரம்பரியமாக ஒக்கலிகர் ஒட்டுகள் ஆதரவு உள்ளன. அதேவேளையில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிவகுமார் முதல்வராக வேண்டும் என்ற காரணத்தால், ஒக்கலிகர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.இதுபோன்று பா.ஜ.,வுக்கு ஏற்கனவே லிங்காயத் சமுதாய ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. இதற்கு அச்சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவே காரணம். தற்போது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளதால், இவ்விரு சமூகத்தின் ஓட்டுகளும் இக்கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரத்தில் தற்போது காங்கிரஸ், சிறுபான்மையினர், குருபர், எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களின் ஓட்டுகளை நம்பி உள்ளன.

வெறுத்த சமூகங்கள்

மைசூரு மாநிலமாக இருந்தபோது, காங்கிரசில் ஒக்கலிகர்கள் அதிகாரத்தில் இருந்தனர். மாநில ஒருங்கிணைப்புக்கு பின், லிங்காயத்துகள் காங்கிரசில் ஆதிக்கம் செலுத்தினர்.கடந்த 1970 வரை அவர்களின் அதிக்கம் தொடர்ந்தது. அதன்பின், கர்நாடகாவில் நடந்த கலரவத்தை தொடர்ந்து, வீரேந்திர பாட்டீல் அரசை, பிரதமர் ராஜிவ் டிஸ்மிஸ் செய்தார். இதனால் கோபமடைந்த லிங்காயத்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இது, தேவகவுடா மற்றும் ஜனதா தளம் தோன்றுவதற்கு வழிவகுத்தது. தேவகவுடாவுக்கு ஒக்கலிகர்கள் ஆதரவு தெரிவிக்க துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை