உத்தனஹள்ளி மாரம்மா கேட்ட வரம் அளிக்கும் உத்தனஹள்ளி மாரம்மா
மைசூரு என்றவுடன், சாமுண்டி மலையும், அதன் மீது குடிகொண்டுள்ள சாமுண்டீஸ்வரி கோவிலும், நம் கண் முன்னே வந்து செல்லும். சாமுண்டி மலையில் இருந்து கூப்பிடும் தொலைவில் சிறிய மலைக்குன்றில், ஜ்வாலாமுகி திரிபுர சுந்தரி குடி கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்; அவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்கிறார்.சாமுண்டீஸ்வரியின் சகோதரியான ஜ்வாலா முகி திரிபுர சுந்தரி, குன்றில் குடி கொண்டுள்ளார். துஷ்டர்களை சம்ஹாரம் செய்த போது, சாமுண்டீஸ்வரிக்கு பக்கபலமாக இருந்ததாக, புராணங்கள் கூறுகின்றன. ஜ்வாலா முகி திரிபுர சுந்தரி என்றால், பலருக்கும் தெரியாது. ஆனால் உத்தனஹள்ளி மாரம்மா என்றால், அனைவருக்கும் தெரியும். யாகத்துக்கு இடையூறு
துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய, அவதாரம் எடுத்த சாமுண்டீஸ்வரியின் வியர்வையில் இருந்து உருவானவர் ஜ்வாலா முகி திரிபுர சுந்தரி. மஹிஷாசுரனின் அட்டகாசத்தால், ரிஷி முனிவர்கள் பாதிப்படைந்தனர். இவர்களின் யாகத்துக்கு இடையூறு விளைவித்தார். இவரை சம்ஹாரம் செய்யும்படி, திரு மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் மன்றாடினர்.மஹிஷாசுரன் தனக்கு பெண்ணால் மட்டுமே, மரணம் நிகழ வேண்டும் என, பிரம்மனிடம் வரம் பெற்றிருந்ததால், மஹிஷாசுரனை தங்களால் சம்ஹாரம் செய்ய முடியாது என்பதை அறிந்த திருமூர்த்திகள், பார்வதி தேவி சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்து, மஹிஷாசுரனுடன் யுத்தம் செய்கிறார்.ஆனால் கீழே சிந்திய ரத்த துளிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான மஹிஷாசுரன் உருவாகின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி தடுமாறிய போது, வியர்வை கொட்டுகிறது. தன் முகத்தில் இருந்து வியர்வையை கையால் துடைத்து வீசும் போது அங்கு ஜ்வாலா முகி திரிபுர சுந்தரி பிறப்பெடுக்கிறார். கீழே விழாத ரத்தம்
ஆச்சரியமடைந்த சாமுண்டீஸ்வரி, நீ யார் என, கேட்கிறார். திரிபுர சுந்தரி, நான் உன் சகோதரி. யுத்தத்தில் உனக்கு உதவ வந்திருக்கிறேன். நீ யுத்தத்தை தொடரலாம் என்கிறார். சாமுண்டீஸ்வரி தன் சூலத்தால் மஹிஷாசுரனை குத்துகிறார். அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை கீழே விழாமல் ஜ்வாலாமுகி தன் நாக்கால் உறிஞ்சுகிறார்.மஹிஷா சம்ஹாரம் முடிந்த பின், சாமுண்டி மலையிலேயே சாமுண்டீஸ்வரி நிலை நிற்கிறார். அவரது சகோதரி சாமுண்டி மலை அருகில் உள்ள சிறிய குன்றின் மீது குடி கொள்கிறார். பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார். உத்தனஹள்ளி கிராமத்தினர் 'உத்தன ஹள்ளி மாரம்மா' என்றே அழைக்கின்றனர்.வாரத்தின் அனைத்து நாட்களும், கோவிலில் பூஜை கைங்கர்யங்கள் நடக்கின்றன. பக்தர்கள் பெருமளவில் வந்து, தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். சக்தி வாய்ந்தது
பொதுவாக கோவில்களுக்கு கோபுரம் இருக்கும். ஆனால் ஜ்வாலா முகி திரிபுர சுந்தரி கோவில், கிராமப்புறங்களில் மாரம்மா கோவில்கள் எப்படி இருக்குமோ, அது போன்று உள்ளது. இந்த கோவில் பல சிறப்புகள் கொண்டது. சக்தி வாய்ந்தது என்பது, அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.உத்தனஹள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள, சிறிய குன்றின் மீது கோவில் கட்டப்பட்டுள்ளது. சாலையில் இருந்து மேட்டில் ஏறி சென்றால், கோவிலை தரிசிக்கலாம். இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. ஒரு நுழைவாயில் 101 படிகள் கொண்டது. மூலஸ்தானத்தின் வலது புறம் சிவன் கோவில் அமைந்துள்ளது. மாரம்மா கோவிலை ஒட்டி பைரவேஸ்வரா, சித்தேஸ்வரா சன்னிதிகள் உள்ளன. - நமது நிருபர் -