உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு... விறுவிறுப்பு!

இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு... விறுவிறுப்பு!

புதுடில்லி - நாடு முழுதும், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 88 லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களின் சில இடங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு மற் றும் கள்ள ஓட்டு புகார்கள் எழுந்தன. எனினும், அவை உடனடியாக சரி செய்யப்பட் டன.தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரகண்ட், அருணாச்சல் உட்பட 21 மாநிலங்களில், 102 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி, முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில், தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில், நேற்று நடந்த இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

முக்கிய பிரபலங்கள்

இதே போல், கர்நாடகாவில் 14; ராஜஸ்தானில் 13; மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா எட்டு; மத்திய பிரதேசத்தில் ஆறு; அசாம், பீஹாரில் தலா ஐந்து.சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா மூன்று மற்றும் மணிப்பூர், திரிபுரா, ஜம்மு - காஷ்மீரில் தலா ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடந்தது. 88 தொகுதிகளில், 50.25 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதிக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், நடிகரும், அரசியல்வாதியுமான அருண் கோவில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் குமார்.முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தலைவருமான குமாரசாமி, பா.ஜ.,வின் ஹேமமாலினி, ஓம் பிர்லா, கஜேந்திர சிங் ஷெ காவத் போன்ற முக்கிய பிரபலங்கள் களத்தில் உள்ள தொகுதிகளுக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.கேரளாவில், 25,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இங்கு சில ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு மற்றும் கள்ள ஓட்டுப்பதிவு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.இதனால், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமானது. இவை தவிர, மாநிலம் முழுதும் எந்த அசம்பாவிதமுமின்றி தேர்தல் நடந்தது. கேரளாவின் பாலக்காடு, ஆலப்புழா மற்றும் மலப்புரத்தில் ஓட்டளித்த பின், தலா ஒருவர் இறந்ததாகவும், கோழிக்கோடு ஓட்டுச்சாவடியில் விழுந்து ஒரு ஓட்டுச்சாவடி முகவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. வெயில் காரணமாக இந்த இறப்புகள் நிகழ்ந்ததா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். மாலை, 5:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், 77.53 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில், 52.74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் நடந்த ஓட்டுப்பதிவில், 76.06 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கர்நாடகாவில் தேர்தல் நடந்த 14 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக ஓட்டுகள் பதிவாகின.

புறக்கணிப்பு

மஹாராஷ்டிராவில், 53.53 சதவீத ஓட்டுகளும், கர்நாடகாவில், 63.90 சதவீத ஓட்டுகளும், கேரளாவில், 63.97 சதவீத ஓட்டுகளும் பதிவாகின. கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஓட்டளித்து விட்டு வரும் வாக்காளர்களுக்கு தள்ளுபடி விலையில் தோசை, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என, பல ஹோட்டல்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து அந்த ஹோட்டல்கள் முன், ஏராளமானோர் சலுகை விலையில் உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்றனர் சத்தீஸ்கர் மாநிலம் ஷிவினி கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடி, திருமண மண்டபம் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த ஓட்டுச்சாவடிக்கு ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர் ராஜஸ்தான் மாநிலம் கோடா - பண்டி தொகுதிக்கு உட்பட்ட குஜ்சாரா ஓட்டுச்சாவடிக்கு, 108 வயதான, புரி பாய் என்ற மூதாட்டியை, அவரது குடும்பத்தினர், சக்கர நாற்காலியில் ஓட்டுப் போட அழைத்து வந்தனர்அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, மஹாராஷ்டிரா, திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்தனர் கர்நாடகாவின் தட்சின கன்னடா மாவட்டத்தில் பஞ்சாருமாலே என்ற கிராமத்தில், மொத்தம், 111 ஓட்டுகள் உள்ளன. இதில் அனைத்து ஓட்டுகளும் நேற்று பதிவாகின கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இண்டிகநதா என்ற ஓட்டுச்சாவடியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ