உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனித மூளையை தொட்டு பார்க்க ஆசையா? பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை போகலாமா!

மனித மூளையை தொட்டு பார்க்க ஆசையா? பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை போகலாமா!

நம்மை சிந்தித்து செயல்பட வைக்கும் மூளை எப்படி இருக்கும் என்பதை, பள்ளி பாடப்புத்தகத்தில் பார்த்திருப்போம், படித்து அறிந்து இருப்போம்.

அருங்காட்சியகம்

சமூக வலைதளங்களில் படம், வீடியோவும் பார்த்திருப்போம். ஆனால், உண்மையான மனித மூளையை, மருத்துவர்கள் பார்த்திருப்பர். பொதுமக்களாகிய நாமும் நம் மூளையை பார்க்க வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்ல, தொடவும் செய்யலாம்.பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை வளாகத்தில், மூளை அருங்காட்சியகம் உள்ளது. இங்கு, வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட, 400க்கும் அதிகமான மூளைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மூளைகள் சேகரித்து, பாதுகாக்கப்படுகின்றன. மூளையில் ஏற்படும் பிரச்னைகள், எதனால் பாதிப்பு ஏற்படுகிறது, அதை எப்படி தடுப்பது இப்படி, பல்வேறு விஷயங்கள் விளக்கப்படுகின்றன.இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மூளை அருங்காட்சியகம் இது மட்டுமே. இங்கு மூளை மட்டுமின்றி, புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல், கணையம், சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், குடல், எலும்புக்கூடு உள்ளிட்ட மனித பிற உறுப்புகளையும் காணலாம்.

எப்போது?

பொதுமக்களுக்கு, புதன்கிழமைகளில் மதியம் 2:30 மணியில் இருந்தும்; சனிக்கிழமைகளில் காலை 10:30 மணி, மதியம் 2:30 மணியில் இருந்தும் அனுமதி அளிக்கப்படுகிறது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முன் அனுமதி பெற்றுத் தான் வர வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு அனுமதி அளிக்கப்படும். 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனுமதி கிடையாது.நேராகச் செல்லும் பொதுமக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.மொத்த அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு, 1 முதல் 2 மணி நேரம் ஆகும். கூடுதல் தகவலுக்கு, 080 - 2656 3357, 26995 786 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !