உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி மாணவர்கள் மூழ்கி இறக்க என்ன காரணம்? அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பயிற்சி மாணவர்கள் மூழ்கி இறக்க என்ன காரணம்? அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியா கேட்:ஜூலை 27 அன்று பழைய ராஜேந்தர் நகர் பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் மூழ்கி மூன்று பயிற்சி மாணவர்கள் இறந்ததற்கான காரணம் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு சி.பி.ஐ.,க்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மத்திய டில்லியின் பழைய ராஜேந்தர் நகரில் பெய்த கனமழையால் ராவ்வின் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. கட்டடத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது.இதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், 25, தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, 25, கேரளாவைச் சேர்ந்த நெவின் டெல்வின், 24, ஆகிய 3 பயற்சி மாணவர்கள் உயிரிழந்தனர்.இந்த வழக்கில் கட்டட உரிமையாளர்களான பர்விந்தர் சிங், தஜிந்தர் சிங், ஹர்விந்தர் சிங், சர்ப்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.இவர்கள் ஜாமின் கேட்டுத் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் குமார் முன்னிலையில் நடந்து வருகிறது.நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய வக்கீல், வழக்கு விசாரணைக்கு மனுதாரர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று உறுதி அளித்தார்.ஆனால் வழக்கு தொடக்க கட்டத்திலேயே இருக்கிறது. சாட்சிகள் பாதிக்கப்படலாம். இன்னும் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம். எனவே ஜாமின் வழங்கக் கூடாது என, சி.பி.ஐ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சி.பி.ஐ., தரப்புக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அன்றைய தினம் கனமழை பெய்ய என்ன காரணம்? அன்று ஏன் இவ்வளவு தண்ணீர் தேங்கியது? வெள்ளத்திற்கு மழையா அல்லது வேறு ஏதாவது காரணமா?சம்பந்தப்பட்ட கட்டடம் தவிர அந்த பகுதியில் வேறெந்த கட்டடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன?சம்பவத்தன்று என்னதான் நேர்ந்தது என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்.(குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் சார்பில் ஆஜரான வக்கீலை பார்த்து) உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஏதேனும் வழங்க முடியுமா?இவ்வாறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், உரிய பண இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.சாலையில் உள்ள மழைநீர் வடிகால் செயல்படவில்லை, முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தாலும், மாநகராட்சி ஊழியர்கள் மீது சி.பி.ஐ., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை