டில்லியில் காற்று மாசை குறைக்க தீர்வு என்ன?: மாற்று வழிகளை அறிவித்த அதிகாரிகள்
டில்லி, பஞ்சாப், ஹரியானாவில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதால், டில்லியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவை எட்டி, பல்வேறு பிரச்னைகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து, விவசாய கழிவுகளை அழிக்க, மாற்று ஏற்பாடுகள் அவசியம் தேவை என்ற கருத்து மேலோங்கியுள்ளது. தலைநகர் டில்லி மற்றும் அதன் எல்லைகளில் அமைந்துள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மாநிலங்களில், பெரும்பாலும் விவசாயம் குடும்பத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை போன்ற பயிர்களை அறுவடை செய்தபின், எஞ்சியிருக்கும் வைக்கோல் உள்ளிட்ட கழிவுகள் விவசாயிகளுக்கு பெரும் பாரமாக உள்ளன. இதனால், அவற்றை எரிப்பதை விவசாயிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு எரிக்கப்படும் கழிவுகளில் இருந்து 'கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்' போன்ற நஞ்சு வாயுக்கள் வெளியேறி, காற்றின் தரத்தை கடுமையாக மாசடைய செய்கின்றன. இதன் விளைவு டில்லி நகரம் முழுதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. குறிப்பாக அக்டோபர் இறுதியிலும், நவம்பர் துவக்கத்திலும் எரிக்கப்படும் இந்த விவசாய கழிவுகள் டில்லி மட்டுமின்றி என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை உள்ளடக்கிய பரிதாபாத், காசியாபாத், குர்கான், மற்றும் நொய்டா பகுதிகளில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவு, இங்கு காற்றின் தரக் குறியீடு 400க்கு மேல் பதிவாகி வருகிறது. தரமான காற்றின் தரக் குறியீடு 50 என மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள சூழலில், கடந்த ஒரு மாதமாக 400க்கு மேல் பதிவாகும் குறியீடால், டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு நடுவே டில்லியின் அன்றாட வேலைகள் நடந்து வருகின்றன. காற்று மாசுபாட்டுக்கு விவசாய கழிவு எரிப்பு மட்டும் காரணமாக கூறப்படுவதில்லை. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உட்பட, பல்வேறு விஷயங்கள் இதற்கு காரணமாக கூறப்படுவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேசமயம், விவசாயக் கழிவுகள் எரிக்கப்படு வதற்கு பதிலாக மாற்று வழிகளை விவசாயிகள் கடைப்பிடிக்கலாம் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மூத்த வேளாண் அதிகாரி கூறியதாவது:விவசாய கழிவுகள், கால்நடைகளின் சிறுநீர், சாணம் போன்றவற்றுடன் கலந்து பதப்படுத்தி வைத்தால், அது உரமாக மாறும். அவற்றை மீண்டும் விவசாயத்துக்கே பயன்படுத்தவும் முடியும். கரும்பு பயிர் உட்பட பல்வேறு பயிர்களின் கழிவுகளை, வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு தீவனமாக தரலாம். தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் விவசாய கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படும் போது, மட்கும் தன்மை உடைய பொருட்களாக உருமாறுகின்றன. மண்ணின் வெப்பத்தை பாதுகாக்கும் வகையில் உள்ள விவசாய கழிவுகளை, வெப்பம் தாங்கும் டைல்ஸ் கற்களாக உருவாக்க முடியும். ஹரியானாவில் விவசாய கழிவு எரிப்பது குறைந்ததற்கு காரணம், அங்கு அவற்றை அகற்ற ஏக்கருக்கு, 1,000 ரூபாய் மானியமும், பயிர்களை பல்வகைப்படுத்த 7,000 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த முறையை பின்பற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.
எத்தனை சம்பவங்கள்?
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த அக்., 1 - நவ., 19 வரை நாடு முழுதும் 42,314 விவசாய கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 12,302, பஞ்சாபில் 8,254, உத்தர பிரதேசத்தில் 3,707, ஹரியானாவில் 1,179 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. விவசாய கழிவுகளை எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு தேவை
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவுடன், காற்று மாசுபாட்டையும் சேர்த்து அனுபவிக்கும் டில்லி மற்றும் சுற்றுவட்டார மக்கள், சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனர். இது பிற மாநிலங்களுக்கும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட, தேவையான விழிப்புணர்வு உத்திகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.