உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் எப்போது?

110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் எப்போது?

பெங்களூரு, : காவிரி ஐந்தாம் கட்ட திட்டம், இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்க, பெங்களூரு குடிநீர் வாரியம் தயாராகி வருகிறது.இது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கும், ஐந்தாம் கட்ட திட்ட பணிகள் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளன. பணிகள் முடிந்த பின், திட்டத்துக்கு நிதியுதவி வழங்கும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி ஆய்வு செய்யும். அதன்பின் ஜூன் இரண்டாம் வாரம், குடிநீர் வினியோகம் துவங்கும்.கடந்த 2016ல், திட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. கொரோனா தொற்று பரவியதால், பணிகள் தாமதமானது. இந்த திட்டத்தில் 2,800 கி.மீ., துார குழாய் பாதை வழியாக தண்ணீரை குடிநீர் வாரியம் வினியோகிக்கும்.பெங்களூரில் எத்தனை பேர், காவிரி நீரை நம்பியுள்ளனர் என்பது பற்றி ஆய்வு நடத்தப்படும். எவ்வளவு குடிநீர் இணைப்புகள் உள்ளன; எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல், குடிநீர் வாரியத்திடம் உள்ளது. இவர்கள் அனைவரும் காவிரி நீரை மட்டுமே பயன்படுத்துகின்றனரா, வீட்டு பயன்பாட்டு போர்வெல்கள் எத்தனை என்ற தகவல்கள் சேகரிக்கப்படும்.இந்த ஆய்வு, வரும் நாட்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணவும், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் உதவியாக இருக்கும். மழைநீரை சேகரித்து, நல்ல முறையில் பயன்படுத்துவது கட்டாயம். இதை ஊக்கப்படுத்த வேண்டும். பல இடங்களில் மழைநீரை நேரடியாக சாக்கடைகளில் விடுகின்றனர். இதனால் சாக்கடைகளில் அழுத்தம் அதிகரிக்கும். இத்தகையோருக்கு அபராதம் விதிக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி