மாண்டியா: ''ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வுக்கு சென்றது ஏன் என்பதற்கு, குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்று, அமைச்சர் செலுவராயசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.விவசாய அமைச்சர் செலுவராயசாமி, மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:மாண்டியாவில் குமாரசாமி போட்டியிடுவதால், எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் வேட்பாளர் வெங்கடரமணேகவுடா, மாண்டியா மண்ணின் மைந்தன். அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் தங்களின் விரோதி என்று, விவசாயிகளுக்கு நன்கு தெரியும்.அரசு செயல்படுத்தும் ஐந்து வாக்குறுதி திட்டங்களால், மக்கள் பயன் அடைவதை, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.ஒக்கலிகர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஒக்கலிக சமூகத்தின் ஆசிர்வாதத்தால், சிவகுமார் துணை முதல்வராகி உள்ளார். எனக்கும், கிருஷ்ணபைரே கவுடாவுக்கும் அமைச்சர் பதவி கிடைத்து உள்ளது. குமாரசாமி முதல்வராக இருந்த போது தான், ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்த சுவாமியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது. அதை ஒக்கலிகர்கள் மறக்கவில்லை.பா.ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் குமாரசாமி என்று அறிவிக்க, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு தைரியம் உள்ளதா. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க 17 எம்.எல்.ஏ.,க்களை மும்பைக்கு அழைத்து சென்றது யார் என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணாவிடம் தான் கேட்க வேண்டும்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை நாங்கள் அனுப்பி வைத்தோம் என்று, குமாரசாமி கூறுகிறார். அப்படி என்றால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்த விஸ்வநாத், கோபாலய்யா, நாராயண கவுடாவை அனுப்பி வைத்தது யார். அவர்கள் பா.ஜ.,வுக்கு சென்றது ஏன். இதற்கு முதலில் குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.