| ADDED : மே 03, 2024 10:54 PM
ஷிவமொகா : காங்கிரஸ் எம்.பி., ராகுல் உரை மொழிபெயர்ப்பு சரியாக இல்லாதது ஏன் என்பதற்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா விளக்கம் அளித்தார்.ஷிவமொகாவில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் எம்.பி., ராகுல் பங்கேற்றார். அவர் ஹிந்தியில் பேச, அமைச்சர் மது பங்காரப்பா, கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.ஆனால் தன்னுடைய பாணியில் மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்று ராகுல் அதிருப்தி அடைந்தார். 'மொழி பெயர்க்க வேண்டாம். போய் அமருங்கள்' என்று கூறி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் அமைச்சர் மது பங்காரப்பா தர்மசங்கடத்துடன் இருக்கைக்குச் செல்ல நேரிட்டது.இந்த விவகாரம் குறித்து, ஷிவமொகாவில் மது பங்காரப்பா நேற்று கூறியதாவது:எனக்கு ஹிந்தி அவ்வளவாக தெரியாது. ஆனாலும், மொழி பெயர்த்தேன். இதில் தவறு எதுவுமில்லை. ஆனால் சில செய்திகள் எனக்கு வலியை தருகின்றன. இத்தனை நாட்களாக குமார் பங்காரப்பா எங்கிருந்தார்; என்ன செய்தார்? இம்முறை கீதா வெற்றி பெறுவார்; மோடியால் ஒன்றும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.