பெங்களூரு: லோக்சபா தொகுதிகளில், கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கான ஓட்டு சதவீதம் குறையும் என, அறிக்கை வந்துள்ளதால், பா.ஜ., தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இம்முறை லோக்சபா தேர்தலை, கர்நாடக காங்கிரஸ், பா.ஜ., கவுரவ பிரச்னையாக கருதின. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து பிரசாரம் செய்தன. பா.ஜ., பல தொகுதிகளில், ஆச்சரியமான வேட்பாளர்களை களமிறக்கியது. மைசூரில் அரச குடும்பத்தின் யதுவீர், பெங்களூரு ரூரலில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத்துக்கு, பா.ஜ., சீட் கொடுத்தது.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா உட்பட பா.ஜ., காங்கிரசின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். தங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.இரண்டு கட்டங்களில் ஓட்டு பதிவும் முடிந்த நிலையில், எத்தனை தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என, தலைவர்கள் கணக்கு போடுகின்றனர். பா.ஜ.,வின் தேர்தல் பொறுப்பு குழுவினர், 28 லோக்சபா தொகுதிகளில் ஆய்வு செய்தனர். மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில், நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், அறிக்கை அளித்தனர்.அதில், 'பா.ஜ.,வுக்கு அதிகமான தொகுதிகளில், வெற்றி வாய்ப்புள்ளது. ஆனால் வேட்பாளர்களின் ஓட்டு வித்தியாசம் குறைவாக இருக்கும். முந்தைய தேர்தலுடன் ஒப்பிட்டால், இம்முறை காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்' என, விவரிக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ., தலைவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.ஜூன் 4ல் முடிவு வெளியான பின், எந்த தொகுதியில் கட்சிக்கு ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது, என்ன காரணம் என்பது குறித்து, தன்னாய்வு செய்ய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக, மாநில பா.ஜ., முதன்மை செயலர் சுனில்குமார் கூறியதாவது:பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. ஆனால் சில தொகுதிகளில், வெற்றியில் ஓட்டு வித்தியாசம் குறைவாக இருக்கலாம். கூட்டணி கட்சிகளுக்கு இடையே, எந்த பிரச்னையும் இல்லை. பரஸ்பரம் ஒத்துழைப்பு கொடுத்தனர்.லோக்சபா தேர்தலில் ஆட்சி இயந்திரத்தை, காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியது. பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்களை மிரட்டியது. வழக்கு பதிவு செய்து அடக்கு முறையை கையாண்டது.இவ்வாறு அவர் கூறினார்.