மருத்துவமனையில் மாந்திரீகம்? மும்பை போலீசார் விசாரணை!
மும்பை: மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகிகளின் அறைகளில் மண்டை ஓடுகள், எலும்புகள், மனித தலைமுடி அடங்கிய எட்டு பானைகள் கண்டறியப்பட்ட நிலையில், அங்கு மாந்திரீக செயல்பாடுகள் அரங்கேறி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாட்டின் பிற நகரங்களில் செயல்படும் லீலாவதி மருத்துவமனையை, 'லீலாவதி கீர்த்திலால் மேத்தா மெடிக்கல் டிரஸ்ட்' துவக்கியது. இதன் முன்னாள் அறங்காவலர்கள் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர். தற்போது, மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் அதன் செயல் இயக்குநராக உள்ளார். முன்னாள் அறங்காவலர்களிடம் இருந்து மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பை, பிரஷாந்த் கிஷோர் மேத்தா, 55, இப்போது பெற்றுள்ளார்.அவர் தலைமையிலான அறங்காவலர்கள், பழைய கணக்கு, வழக்குகளை ஆய்வு செய்த போது, 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.இதையடுத்து, பாந்த்ரா நீதிமன்ற உத்தரவுபடி, அந்த நகர போலீஸ் ஸ்டேஷனில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அறங்காவலர்கள் ஏழு பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மீது, பிரஷாந்த் கிஷோர் மேத்தா புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, லீலாவதி மருத்துவமனையின் வளாகத்தில் மாந்திரீக வேலைகள் அரங்கேறியதாகவும், தற்போது அறங்காவலர் நிர்வாகிகளின் அறைகளில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகள், தலை முடி உள்ளிட்டவை அடங்கிய எட்டு பானைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தொடர்பான புகாரை, முதலில் போலீசார் விசாரணைக்கு ஏற்க மறுத்ததால், பாந்த்ரா நீதிமன்றத்தை மருத்துவமனை நிர்வாகம் நாடியது.இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, லீலாவதி மருத்துவமனை வளாகத்தில் மாந்திரீக செயல்பாடுகள் அரங்கேறி உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.