கார் மோதி பெண் பலி 24 மணி நேரத்தில் ஓட்டுநர் கைது
தவுலா குவான்: தென்மேற்கு டில்லியின் தவுலா குவான் மெட்ரோ நிலையம் அருகே பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.கடந்த 20ம் தேதி அதிகாலை 2:30 மணி அளவில் தவுலா குவான் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் நடந்து சென்ற ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.தவுலா குவான், டில்லி கான்ட், ஹரி நகர், திகார் சிறைச்சாலை ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.அவற்றில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த ராம் குமார் தீட்சித், 39, என்பவரை போலீசார் அடையாளம் கண்டு, கைது செய்தனர்.விபத்தை ஏற்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.