மைசூரு: ''மைசூரு தொகுதி வளர்ச்சிக்கு உதவும்படி, முதல்வர் சித்தராமையா, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன்,'' என மைசூரு பா.ஜ., புதிய எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.மைசூரு லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்த மன்னர் யதுவீர், அபார வெற்றி பெற்றார். பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக டில்லி சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு மைசூரு திரும்பினார். இந்நிலையில், மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:மைசூரு, குடகு மாவட்டங்களின் 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், எனக்கு ஓட்டு போட்டு, தங்கள் பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம், மோடி, மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளனர்.கர்நாடகாவின் ஐந்து பேருக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதனால் கண்டிப்பாக எதிர்பார்த்த வளர்ச்சி பணிகள் நடக்கும். மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதற்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி.மைசூரு வளர்ச்சிக்கு, அனைவரது ஒத்துழைப்பும் முக்கியம். தொகுதி வளர்ச்சிக்கு உதவும்படி, முதல்வர் சித்தராமையா, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆகியோரை கேட்டு கொள்கிறேன். விரைவில் அவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன். மைசூரு சுற்றுலா மையமாக திகழ்வதால், சுற்றுலா துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.பாரம்பரிய கட்டடங்கள் அதிகமாக உள்ளன. எனவே தேவராஜா, லேன்ஸ் டவுன் கட்டடங்களை, தரைமட்டமாக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பாதுகாக்கப்படும். மைசூரு விமான நிலையம், ரயில் நிலையம், தொழிற்சாலைகளும் மேம்படுத்தப்படும். தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து, எனது குவெம்பு நகர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். பொது மக்கள் அனைவரும் என்னை நேரில் சந்தித்தும் முறையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.