ஓலா பைக் ஷோரூமுக்கு தீ வைத்த வாலிபர் கைது
கலபுரகி, கர்நாடக மாநிலம், கலபுரகி டவுன் ஹூம்னாபாத் சாலையில், ஓலா நிறுவனத்திற்கு சொந்தமான, மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் உள்ளது.கடந்த 20 நாட்களுக்கு முன், கலபுரகியின் சவுக் பகுதியைச் சேர்ந்த முகமது நதீம், 28, என்பவர், ஷோரூமில் இருந்து புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்கினார். ஓரிரு நாட்கள் மட்டுமே சரியாக ஓடிய ஸ்கூட்டர், அடிக்கடி பழுதாக ஆரம்பித்தது. ஷோரூமிற்கு கொண்டு சென்று ஸ்கூட்டரை, முகமது நதீம் பழுது பார்த்து வந்தார். ஆனாலும், பழுது சரியாகவில்லை. இதுகுறித்து ஷோரூம் ஊழியர்களிடம் கேட்டபோது, சரியாக பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஷோரூம் ஊழியர்களுடன், முகமது நதீம் தகராறு செய்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே வந்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆயினும், ஆறு புதிய ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.இதற்கிடையில் தீ விபத்து நடந்தபோது, முகமது நதீமும் ஷோரூமில் இருந்தார். அவர் மீது சந்தேகம் இருப்பதாக, ஷோரூம் மேலாளர் போலீசில் புகார் செய்தார். நேற்று அவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.அப்போது, தான் வாங்கிய ஸ்கூட்டர் அடிக்கடி பழுது ஆனதாலும், ஷோரூம் ஊழியர்கள் அலட்சியப்படுத்தியதாலும், சிறிய பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்து, ஊழியர்கள் பார்க்காத நேரத்தில், ஊற்றி தீ வைத்ததை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.