உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால்... ரூ.1 கோடி அபராதம்!

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால்... ரூ.1 கோடி அபராதம்!

புதுடில்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்போருக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில், விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நபரை விமானத்தில் பறப்பதற்கான தடை பட்டியலில் சேர்க்கவும் அரசு முடிவு செய்துள்ளது.நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் மொபைல் போன், இ - மெயில், சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. இதையடுத்து, பல மணி நேரம் நடக்கும் சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால், பல விமானங்களின் சேவைகளில் மாற்றமும் ஏற்படுவதோடு, உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால், விமானத்தை தரையிறக்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம். பயணியருக்கான இழப்பீடு என, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

விசாரணை

நம் நாட்டில் இந்தாண்டு இதுவரை மட்டும், 1,000 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. கடந்த அக்டோபரில் மட்டும், 666 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. விசாரணையில், இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்பது தெரிய வந்தன. விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை வைத்தது. மேலும் இது தொடர்பாக, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பல முறை ஆலோசனையும் நடத்தினார். இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்போருக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில், விமான பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

பறக்க தடை

புதிய திருத்தத்தின்படி, விமானத்துக்கு குண்டு மிரட்டல் விடுக்கும் தனிநபருக்கு, 1 லட்சம் ரூபாய்; சிறிய அமைப்புக்கு, 50 லட்சம் ரூபாய்; நடுத்தர அமைப்புக்கு 75 லட்சம் ரூபாய் மற்றும் பெரிய அமைப்புக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், தனிநபர் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களை, விமானத்தில் பறப்பதற்கான தடை பட்டியலில் சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி