10 கி.மீ., துாரம் பயணித்து சாப்பிடும் நுப்பிட்டு மசாலா
நுப்பிட்டு மசாலா பெயரை கேட்டிருக்க மாட்டீர்கள். சென்னப்பட்டணாவின், கோடம்பஹள்ளி கிராமத்தில் இந்த சிற்றுண்டி மிகவும் பிரபலம். பலரும் தேடி வந்து சாப்பிடுகின்றனர்.ராம்நகர், சென்னப்பட்டணாவின் மங்காடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவு. இவர் நுப்பிட்டு மசாலா தயாரிப்பதில் கைதேர்ந்தவர். இதன் சுவைக்கு மயங்காதோர் இல்லை. மாண்டியாவில் பலகாரக் கடை நடத்திய இவர், கொரோனா நேரத்தில் தொழிலை நடத்த முடியாமல் கடையை மூடினார். வாழ்க்கை நடத்த ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.புதுமையான சிற்றுண்டியை தயாரிக்க திட்டமிட்டார். தன் சொந்த ஊரான, சென்னப்பட்டணாவின் மங்காடஹள்ளிக்கு வந்தார். கோடம்பள்ளியில் நொறுக்கு தீனி கடை துவக்கினார். நுப்பிட்டு மசாலா என்ற சிற்றுண்டியை தயாரித்து விற்றார்.இது, வெங்காயம், வெள்ளரிக்காய், கடலைக்காய், தக்காளி, காராபூந்தி, கேரட், தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு, கொத்துமல்லி சேர்த்து தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியாகும். அனைத்து பொருட்களையும், சரியான அளவில் சேர்க்கிறார்.இதன் சுவையும், வாசமும் மக்களை ஈர்த்தது. வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்குகின்றனர். ஒரு பிளேட் விலை 25 ரூபாய். தினமும் 80 முதல் 100 பிளேட் வரை விற்பனை ஆகிறது. இதன் சுவைக்காகவே, 10 கி.மீ., துாரத்தில் இருந்து தேடி வருகின்றனர்.சென்னப்பட்டணா - ஹலகூரு பிரதான சாலையில், வாகனத்தில் செல்லும் பயணியர், இங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு நுப்பிட்டு மசாலாவை சாப்பிடுகின்றனர்.மாலை நேரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம்; சிலருக்கு கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்படுகிறது. நுப்பிட்டு மசாலாவுடன், குல்கந்து புரூட் சாலட்டும் தயாரித்து விற்பனை செய்கிறார். பப்பாளி, அன்னாசி, தர்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம் உட்பட பல்வேறு பழங்களை கலந்து அதில் குல்கந்து கலந்து கொடுக்கிறார். இது மிகவும் சுவையானது. இதன் விலையும் 25 ரூபாய் தான். தினமும் 100 பிளேட்டுக்கும் அதிகமான புரூட் சாலட் விற்பனையாகிறது.போனில் ஆர்டர் செய்தால், சுற்றுப்பகுதிகளுக்கு ஹோம் டெலிவரி செய்கிறார். இதற்காக, 70195 16591 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் - நமது நிருபர் -.