தசரா விழாவுக்கு ரயிலில் பயணித்தது 10 லட்சம் பேர்!: ரயில்வேக்கு ரூ.7.37 கோடி வருவாய்
மைசூரு: தசரா விழாவை ஒட்டி, மைசூருக்கு 12 நாட்களில் 10 லட்சம் பேர் ரயிலில் பயணித்து உள்ளனர். இதன்மூலம் ரயில்வேக்கு 7.37 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.விஜயதசமியை ஒட்டி, ஆண்டுதோறும் மைசூரில் நடக்கும் தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவை காண கர்நாடகாவின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவர். மைசூரு தசராவின் சிகர நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த ஆண்டு விழா, கடந்த 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை, 10 நாட்கள் நடந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்த விழாவில் பல தசராக்கள், கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. வர்த்தகம் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் நடந்தது. இந்நிலையில், தசராவை ஒட்டி ரயில்வே நிர்வாகத்திற்கும் நல்ல வருவாய் கிடைத்து உள்ளது. அடையாள பலகை
தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு ரயில்வே கோட்ட வணிக பிரிவு மேலாளர் கிரிஷ் தர்மராஜ் கலகொண்டா நேற்று வெளியிட்ட அறிக்கை:மைசூரில் நடந்த 2024 தசரா பண்டிகையின் போது, பயணியர் போக்குவரத்தை நிர்வகிப்பதில், தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்டம் முன்மாதிரியாக அமைந்தது. கோட்ட ரயில்வே மேலாளர் ஷில்பி அகர்வால் தலைமையின் கீழ், பண்டிகை காலம் முழுதும் தடையற்ற செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட பயணியர் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.அக்டோபர் 3 முதல் 14ம் தேதி வரை 12 நாட்கள் மைசூரு ரயில் நிலையத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமாக பயணியர் வருகை தந்தனர். அக்டோபர் 12ம் தேதி ஜம்பு சவாரி அன்று மட்டும் 9.20 லட்சம் பயணியர், ரயில்களில் வருகை தந்தனர். இதன்மூலம் ரயில்வேக்கு 7.37 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு 8.20 லட்சம் பயணியர் வந்தனர். அதன்மூலம் 6.64 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. நடைமேடைகளில் கூடுதல் அடையாள பலகைகள் நிறுவப்பட்டன. தெளிவான ஏற்பாடு
எஸ்கலேட்டர்கள், ஓய்வு அறைகள், நடைமேடைகளுக்கு பயணியர் குழப்பம் இன்றி செல்லும் வகையில், தெளிவான மற்றும் துல்லியமான ஏற்பாடுகளை செய்து இருந்தோம்.பயணியரின் கூடுதல் வருகையை கருத்தில் கொண்டு அசோகபுரம், சாமராஜபுரம், ஸ்ரீரங்கப்பட்டணா, பாண்டவபுரா, சாம்ராஜ்நகர், கிருஷ்ணராஜபுரம் உட்பட மைசூரு கோட்ட ரயில் நிலையங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். டிக்கெட் பரிசோதகர்கள் 23 பேர், வணிக ஊழியர்கள் 13 பேர், ரயில்வே போலீசார் 100 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பயணியரை சரியான முறையில் நிர்வகித்தனர்.இதுதவிர மொபைல் மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதன்மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கும் கவுன்டர்களில் கூட்டம் கணிசமாக குறைந்தது. அந்த திட்டம் வெற்றியும் பெற்றது. எதிர்காலத்திற்கும் இந்த திட்டம் உதவும். கூட்ட நெரிசலை குறைக்க மைசூரு ரயில் நிலையத்தில், பிரதான சூழற்சி முறையில் மூன்று முன்அச்சிடப்பட்ட டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. கேமராக்கள்
மைசூரில் இருந்து பெங்களூரு, சாம்ராஜ்நகர், தார்வாட், கார்வார், அரிசிகெரே உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் சரியான நேரத்தில் புறப்படுவது உறுதி செய்யப்பட்டது. பயணியர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதனால், மைசூரு ரயில் நிலையத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. 73 கண்காணிப்பு கேமராக்கள் மக்களை கண்காணித்தன. ரயில்வே போலீசார் கேமராக்களை தொடர்ந்து கண்காணித்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உதவியாக இருந்த, அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.