7 பஸ் உட்பட 10 வாகனங்கள் மோதி தீ பிடித்தது; பனி மூட்டத்தால் நடந்த விபத்தில் 13 பேர் பலி
மதுரா: உத்தர பிரதேசத்தில் கடும் ப னிமூட்டம் காரணமாக நேற்று நடந்த சாலை விபத்துகளில், 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மதுராவில் உள்ள டில்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த விபத்தில் மட்டும், 13 பேர் உயிரிழந்தனர். உ.பி.,யில் கடந்த சில நாட்களாக கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், ஆக்ரா - நொய்டா இடையே வாகனங்கள் நேற்று அதிகாலை அணிவகுத்து சென்றன. அப்போது நிலவிய கடும் பனிப்பொழிவால், 6 அடி துாரத்தில் சென்ற வாகனங்கள் கூட கண்ணு க் கு தென்படவில்லை. இதனால், எக்ஸ்பிரஸ் சாலையில் அணிவகுத்துச் சென்ற வாகனங்கள் மீது பின்னால் வந்த ஏழு பஸ்கள், கார்கள் உள்ளிட்ட மூன்று சிறிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அதில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தீக்கிரையாகினர். இந்த விபத்தி ல், 13 பேர் பலியாகினர்; 75 பேர் காயம் அடைந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். அதே போல், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பனிப்பொழிவால் அடிக்கடி விபத்து ஏற்படுவது குறித்து விசாரணை நடத்த உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாளில் 25 பேர் பலி
உ.பி., முழுதும், கடும் பனிமூட்டத்தால் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், 25 பேர் உயிரிழந்தனர். மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த சாலை விபத்தில், 13 பேர் உயிரிழந்த நிலையில், பஸ்தி மற்றும் உன்னாவோவில் தலா நான்கு பேரும், மீரட், பாராபங்கியில் தலா இருவரும் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் உயிரிழந்தனர். போதிய வெ ளிச்சமின்மையே இந்த விபத்துகளுக்கு காரணம் என, அதிகாரிகள் கூறினர்.