உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை பொருள் தொடர்பாக 5 மாதங்களில் மாநிலத்தில் 1,100 பேர் கைது: ரேகா குப்தா

போதை பொருள் தொடர்பாக 5 மாதங்களில் மாநிலத்தில் 1,100 பேர் கைது: ரேகா குப்தா

புதுடில்லி:''போதை பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக, கடந்த நான்கைந்து மாதங்களில், 1,100 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த இடத்தில் போதை பயன்பாடு இருந்தாலும், '1933' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்று, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளை பாராட்டவே வேண்டும்.அதே நேரத்தில் பொதுமக்கள் ஆதரவும் இருந்தால் தான், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். அவ்வப்போது சில பெற்றோர் எங்களை அணுகி, 'எங்களின் குழந்தைகள் போதைக்கு அடிமையாகி விட்டனர். அதனால் எங்கள் குடும்பம் சிதைந்து போய் விட்டது. யாருமே ஆதரவு இல்லை என்ற நிலையில் உள்ளோம்' என்கின்றனர். அதுபோன்ற சூழ்நிலையில் நாம் ஓரடி முன் வைத்து, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.கடந்த நான்கைந்து மாதங்களில் மட்டும், 1,100 பேர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது, மிகவும் அபாயகரமான எண்ணிக்கை. இதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான பொறுப்பை நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.எங்கு போதைப்பொருள் பயன்பாடு உள்ளதோ அந்த இடம் குறித்த தகவலை, 1933 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று பட்டால் தான், இந்த தவறான பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும்.போதைப்பொருள் கடத்தல், இந்த சமூகத்தையே அழிக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உறுதியை நாம் அனைவரும் எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை