இளைஞர் தசரா நாளை துவக்கம் பாதுகாப்புக்கு 1,239 போலீசார்
மைசூரு: ''மைசூரில் இளைஞர் தசரா நாளை துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்,'' என, எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசராவின்போது, இளைஞர் தசரா நடக்கும். இந்த தசரா இளைஞர்கள் திறமையை வெளிப்படுத்தும், ஒரு மேடையாக பார்க்கப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று, ஆண்டுதோறும் இளைஞர் தசரா களைகட்டும். ஒவ்வொரு ஆண்டும் மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் தான், இளைஞர் தசரா நடந்து வந்தது.ஆனால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இந்த ஆண்டு இடம் மாற்றப்பட்டு உள்ளது. சாமுண்டி மலை பின்பக்கம் இருக்கும், உத்தனஹள்ளி மாரியம்மன் கோவில் அருகே உள்ள, மைதானத்தில் இளைஞர் தசரா கொண்டாடப்பட இருக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மைசூரு எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் நேற்று அளித்த பேட்டி:மைசூரு இளைஞர் தசரா 6ம் தேதி துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. சாமுண்டி மலை பின்பக்கம் வனப்பகுதி அருகே நிகழ்ச்சி நடப்பதால், தேவையின்றி யாரும் வனப்பகுதிக்குள் செல்ல கூடாது.நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்வோருக்கு, எந்த தொந்தரவும் ஏற்படாமல் இருக்க, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து, மெயின் ரோடு வரை மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது.பாதுகாப்பு பணிக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். நகர, சென்ட்ரல் பஸ் நிலையங்களில் இருந்து, இளைஞர் தசரா நடக்கும் இடத்திற்கு, பஸ் அடிக்கடி இயக்கப்படும். சக்தி திட்டத்தின் கீழ் பெண்கள் பயணம் செய்யலாம்.தினமும் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பாஸ் வாங்கியவர்கள் அமர்ந்து பார்க்க 5,000 இருக்கைகள் அமைக்கப்படும். வனப்பகுதி என்பதால் இடத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள, மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.