உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரவள்ளி கிழங்கின் தோலை சாப்பிட்ட 13 பசுக்கள் பலி மாணவருக்கு குவியும் உதவிகள்

மரவள்ளி கிழங்கின் தோலை சாப்பிட்ட 13 பசுக்கள் பலி மாணவருக்கு குவியும் உதவிகள்

மூணாறு,:இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மரவள்ளி கிழங்கின் தோலை சாப்பிட்ட 13 பசுக்கள் பரிதாபமாக பலியான நிலையில் அவற்றை வளர்த்த வெள்ளியாமற்றம் 10ம் வகுப்பு மாணவர் மாத்யூவுக்கு கேரள மாநில அரசு, நடிகர்கள், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் உதவிகள் குவிந்தன. இதற்கு குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.தொடுபுழா அருகே வெள்ளியாமற்றம் பென்னி. பசு மாடுகளை வளர்த்து வந்தார். இவர் ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்ததால் மனைவி ஷைனி, மகன்கள் ஜார்ஜ், மாத்யூ, மகள் ரோஸ்மேரி ஆகியோர் நிர்கதியாகினர். குழந்தைகள் சிறுவர்கள் என்பதால் பசுக்களை விற்க ஷைனி முடிவு செய்தார். ஆனால் அவற்றை விற்றால் வருமானத்திற்கு வழியில்லாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த பத்து வயதே ஆன, இரண்டாவது மகன் மாத்யூ, பசுக்களை விற்க விடாமல் தடுத்து வளர்த்து வந்தார்.

கேரள அரசு விருது

10ம் வகுப்பு படிப்பையும் கைவிடாமல் 20 க்கும் மேற்பட்ட பசுக்களை பராமரித்து வருவாய் ஈட்டியதால் 2021ல் சிறுவர்களுக்கான சிறந்த பால் உற்பத்தியாளர் விருதை வழங்கி மாணவர் மாத்யூவை கேரள மாநில அரசு கவுரவித்தது.

13 பசுக்கள் இறப்பு

இந்நிலையில் டிச.,31 இரவு வழக்கம் போல் மரவள்ளி கிழங்கின் தோலை பசுக்களுக்கு தீவனமாக வைத்து விட்டு மாத்யூ மற்றும் குடும்பத்தினர் துாங்கச் சென்றனர். சிறிது நேரத்தில் பசுக்களுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 13 பசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. மரவள்ளி கிழங்கின் தோலில் ஏற்பட்ட விஷ தன்மையால் பசுக்கள் இறந்ததாக தெரிய வந்தது. மாத்யூவும், குடும்பத்தினரும் பெரும் சோகமடைந்தனர். வருவாய் இழப்பும் ஏற்பட்டது.

குவிந்த உதவிகள்

மாத்யூ குடும்ப நிலைமை தெரிந்து உதவிக்கரம் நீட்ட பலர் முன் வந்தனர். மாநில நீர் வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், பால்வளத்துறை அமைச்சர் சிந்து ராணி ஆகியோர் மாத்யூ வீட்டிற்கு சென்று அரசு சார்பில் 5 பசுக்கள் வழங்கப்படும் என்றனர். நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நேரில் வழங்கினார். நடிகர் மம்முட்டி ரூ.ஒரு லட்சமும், பிரதிவிராஜ் ரூ.2 லட்சமும் வழங்கினர். தொழிலதிபர் யூசுப்அலி பத்து பசுக்கள் வாங்க ரூ.5 லட்சம் வழங்கினார். பால் வளத்துறை சார்பில் மில்மா நிறுவனம் உடனடி தேவையாக ரூ.45 ஆயிரம் வழங்கியது. கால்நடை தீவனத்துறை ஒரு மாதத்திற்கு இலவசமாக தீவனம் வழங்கியது. தொடுபுழா எம்.எல்.ஏ., ஜோசப் சார்பில் ஒரு பசு வழங்கப்பட்டது. இடுக்கி 'கெயர் அறக்கட்டளை' சார்பில் தலைவர் எம்.பி., டீன் குரியாகோஸ் ரூ.20 ஆயிரம் காசோலையை நேரில் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 3 பசுக்கள் வழங்கப்படும் என மாநில செயலாளர் கோவிந்தன் அலைபேசி வாயிலாக மாத்யூவிடம் தெரிவித்துள்ளார். உதவிகள் குவிந்துள்ளதால் நெகிழ்ச்சியடைந்த மாத்யூ மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dhandapani
ஜன 07, 2024 08:39

மனிதநேயத்தோடு சிறுவனுக்கு உதவிய நல்லஉள்ளங்களுக்கு அனைவரும் நன்றிபாராட்டாமல் இருக்கமுடியவில்லை , "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" பாரதபூமி ஈகை நிறைந்தபூமி, அந்த சிறுவனுக்கு ஆறுதல்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ