ஆன்லைன் வேலை மோசடி பணம் பறித்த 14 பேர் கைது
புதுடில்லி:ஆன்லைனில் வேலை வழங்குவதாக பணம் பறித்து மோசடி செய்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.தில்சத் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மருத்துவத்துறையில் வேலை தேடி வந்தார். இதற்கான பிரத்யேக இணையதளங்களில் தன்னுடைய சுய விபரங்களை பதிவேற்றினார்.கடந்த ஜனவரி 27ம் தேதி இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பிரியா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு ஒரு பெண் பேசினார். திரும்பப் பெறும் வகையில் பாதுகாப்பு வைப்புத் தொகையாக 500 ரூபாய் செலுத்தும்படி கேட்டார்.அதன்படி இவரும் செலுத்தினார். அடுத்த சில நாட்களில் தொலைபேசி நேர்காணல் நடத்தினார். பயிற்சிக்காக 3,999 ரூபாயும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 7,500 ரூபாயும் வேலைக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்க 7,250 ரூபாயும் இவர் செலுத்தினார்.அடுத்து சம்பள பட்டுவாடா செயல்படுத்தும் நடைமுறைக்கு 11,000 ரூபாய் செலுத்தும்படி பிரியா கூறினார். இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இளம்பெண் பணம் செலுத்திய வழிமுறைகளை ஆராய்ந்த போலீசார், பணம் மோசடி செய்த வழித்தடங்களை கண்டறிந்தனர்.நொய்டாவின் செக்டார் 3ல் இருந்து ஒரு கும்பல் செயல்பட்டு வருவதை கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஆறு பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டு வந்த பஹிக் சித்திக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் லட்சுமி நகர் மெட்ரோ நிலையம் அருகே மோஹித் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.எட்டு மடிக்கணினிகள், 47 மொபைல் போன்கள், 57 சிம் கார்டுகள், 15 டெபிட் கார்டுகள், இரண்டு வைபை டாங்கிள்கள் மற்றும் ரூ.1,31,500 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.