உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ அகாடமியில் முதன்முறையாக பயிற்சி முடித்த 17 வீராங்கனையர்

ராணுவ அகாடமியில் முதன்முறையாக பயிற்சி முடித்த 17 வீராங்கனையர்

புனே: நம் முப்படைகளின் வரலாற்றில் முதன்முறையாக, புனேவின் தேசிய ராணுவ அகாடமியில் இருந்து, 17 வீராங்கனையர் பட்டப்படிப்பு முடித்து நேற்று வெளியேறினர். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய நம் முப்படைகளில் அதிகாரிகளாக பணியில் சேருபவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, என்.டி.ஏ., எனப்படும், தேசிய ராணுவ அகாடமி துவங்கப்பட்டது.மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்த அகாடமியில், பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, அதன்பின் அகாடமியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். மூன்றாண்டு படிப்பு முடிந்ததும் அவர்களின் திறனுக்கு ஏற்ப முப்படைகளில் ஒன்றில் பணியமர்த்தப்படுகின்றனர்.ஆண்டுதோறும், 4 லட்சம் பேர் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். இதில், 6,300 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். இவர்களில், 300 - 350 பேர் மட்டுமே பட்டப்படிப்பில் சேர தகுதி பெறுகின்றனர்.என்.டி.ஏ.,வில் ஆண்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்த நிலையில், பெண்களையும் சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றம், 2021ல் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, 2022ல் நடந்த, 148வது நுழைவுத்தேர்வை பெண்களும் எழுத யு.பி.எஸ்.சி., அனுமதி அளித்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்று பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து நேற்று வெளியேறினர். இதில், 300 ஆண்களுடன், 17 பெண்கள் முதல்முறையாக பட்டப்படிப்பு முடித்து வீராங்கனையராக வெளியேறினர். முன்னாள் ராணுவ தலைமை தளபதியும், மிசோரம் மாநிலத்தின் தற்போதைய கவர்னருமான ஜெனரல் வி.கே.சிங், பயிற்சி நிறைவு அணிவகுப்பின் மதிப்பாய்வு அதிகாரியாக பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:தேசிய ராணுவ அகாடமி வரலாற்றில் பெண்கள் பயிற்சி முடித்து முதன்முறையாக வெளியேறும் இந்த நாள், தனித்துவமான குறிப்பிடத்தக்க நாளாகும். அகாடமியின் பயணத்தில் இது முக்கிய மைல்கல். இது பெண்கள் மேம்பாட்டை மட்டுமல்ல, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டையும் உள்ளடக்கியது. மகளிர் சக்தியின் தவிர்க்க முடியாத சின்னம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை