17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாக்., பாதுகாப்பு படையினர் அதிரடி
பெஷாவர்: பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடத்தை ஹெலிகாப்டர் வாயிலாக குறிவைத்து, அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு தாக்குதல்களில், 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மற்றும் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, இரண்டு மாவட்டங்களிலும் பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பன்னு மாவட்டத்தின் பாகா கேல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும், ஹபீஸ் குல்பஹதுார் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.இதேபோல் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் ஹாசோ கேல் பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தியதில், ஏராளமான ஆயுதங்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.இருவேறு தாக்குதல்களில், மொத்தம் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.