போபால் : மத்திய பிரதேசத்தில், ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 36 லட்சம் ரொக்கம், நான்கு சொகுசு கார்கள், 17 டன் தேன் பறிமுதல் செய்யப்பட்டது. ம.பி.,யின் பொதுப்பணி துறையில் தலைமை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஜி.பி.மெஹ்ரா. இவர், அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, போபால் மற்றும் நர்மதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது வீடு, பண்ணை வீடு என நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். மெஹ்ராவுக்கு சொந்தமான முதல் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8.79 லட்சம் ரொக்கம், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 56 லட்சம் ரூபாய்க்கான வைப்புத்தொகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஆனால், மற்றொரு வீட்டில் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத 26 லட்சம் ரொக்கம், 3.05 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 5.5 கிலோ எடையிலான வெள்ளி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் போபாலை ஒட்டியுள்ள நர்மதாபுரத்தில் மெஹ்ராவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவரது பெயரில் ஏழு காட்டேஜ்கள், கட்டுமான பணியில் உள்ள 32 காட்டேஜ்கள், கோவில், மாட்டு தொழுவம், பிரமாண்ட மீன் பண்ணை உள்ளிட்டவை இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுதவிர, அங்கு ஆறு டிராக்டர்கள், நான்கு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை எல்லாவற்றையும் விட, அந்த பண்ணை வீட்டில், 17 டன் தேன் இருந்ததை கண்டு அதிகாரிகள் மிரண்டு போயினர். எதற்காக, அந்த தேனை அவர் பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சோதனையின் முடிவில், மெஹ்ராவின் வீட்டில் இருந்து 36.04 லட்சம் ரொக்கம், 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 5.5 கிலோ எடையிலான வெள்ளி மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மெஹ்ரா, பினாமியின் பெயரில் பல்வேறு முதலீடுகளை செய்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.