ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது மேலும் 18 வழக்குகள் பதிவு: பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.,வான மெஹ்ராஜ் மாலிக், 37, மீது, மேலும் 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, தோடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், மெஹ்ராஜ் மாலிக். சர்ச்சை ஆம் ஆத்மியின் ஒரேயொரு எம்.எல்.ஏ.,வான இவர், சமீபத்தில், தோடா மாவட்ட கலெக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, கலெக்டரை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொது பாதுகாப்பு சட்டத்தில் மெஹ்ராஜ் மாலிக் கைது செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீரில், இச்சட்டத்தில் கைது செய்யப்படும் முதல், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., இவர். இச்சட்டத்தின்படி, விசாரணை இல்லாமல் ஒருவரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தில் கைதான மெஹ்ராஜ் மாலிக் மீது, மேலும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வழக்குகள், அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தரக்குறைவாக பேசியது தொடர்பானவை. 'பேஸ்புக்' சமூக ஊடகத்தில், 5 லட்சம் பின்தொடர்பவர்களை வைத்துள்ள மெஹ்ராஜ் மாலிக், அதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தோடாவில் அமைதியின்மை, வன்முறையைத் துாண்டியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், வன்முறை சம்பவங்கள் குறிப்பிடவில்லை. அரசு அலுவலகங்களை எரிக்க, தாக்குதல்களை நடத்த பொதுமக்களை துாண்டியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. மேலும், போதைப் பொருட்களை உட்கொள்ளும்படி இளைஞர்களை துாண்டியதாகவும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது அரசு அதிகாரிகளை அச்சுறுத்தியது; நிர்வாகத்திற்கு எதிராக மக்களை துாண்ட முயன்றதாகவும் மெஹ்ராஜ் மாலிக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டது; அனுமதியின்றி பொது பேரணி நடத்தியது; தோடாவில் மருத்துவக் கல்லுாரி டாக்டர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.