உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீரட் கொலை வழக்கில் 2 கிரிமினல்கள் கைது

மீரட் கொலை வழக்கில் 2 கிரிமினல்கள் கைது

மீரட்:உத்தர பிரதேசத்தில், ஜூலை மாதம் நடந்த கொலை தொடர்பாக, இரண்டு கிரிமினல்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி, முகமது சலீம் என்ற தீவானா என்பவர், உத்தர பிரதேசத்தின் ஹசிம்புரா என்ற பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, வாஜித் என்ற பூரா மற்றும் அவரின் கூட்டாளி யுவைஸ் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, கடந்த 15ம் தேதி இரவில், கிலா ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை சுற்றி வளைத்தனர். போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க, அவர்கள் இருவரும் தப்பியோடிய போது, போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு அவர்களும், துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனினும், அவர்களை போலீசார் கைது செய்து, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சட்ட விரோதமாக வைத்திருந்த சில ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், மொபைல் போன்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி, விசாரித்தனர். கைதாகியுள்ள வாஜித் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அதுபோல, யுவைஸ் மீதும் சில கொலை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில், தீவானா கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும், அவர்களுடன் சேர்ந்து மேலும் மூன்று பேருக்கு அந்த கொலையில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை