6,000 அடி உயர மலையில் சிக்கிய வெளிநாட்டு வீராங்கனைகள்; 3 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சமோலி: உத்தரகண்டில் உயரமான மலையில் சிக்கிய இரு வெளிநாட்டு மலையேற்ற வீராங்கனைகளை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். சமோலி மாவட்டத்தில் சுமார் 6,995 மீட்டர் உயரம் கொண்ட சவுகாம்பா 3 எனும் மலையில், இந்திய மலையேறும் அறக்கட்டளையின் சார்பில் வெளிநாட்டவருக்கான மலையேற்ற சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சேல் தெரசா மற்றும் இங்கிலாந்தின் பேவ் ஜேன் ஆகியோர் ஈடுபட்டனர். கடந்த 3ம் தேதி இருவரும் 6,015 மீட்டர் உயரத்திற்கு சென்ற போது, அவர்களிடம் இருந்த உபகரணங்களை தவற விட்டு விட்டனர். இதனால், இருவரும் மேற்கொண்டு மலையை ஏற முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக மலையில் ஏறவோ, இறங்கவோ முடியாமல் திணறி வந்த நிலையில், இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் உதவியுடன் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருவரின் உடல்நலத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.