உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 மாதங்களில் 30,000 பேரிடம் ரூ.1,500 கோடி மோசடி

6 மாதங்களில் 30,000 பேரிடம் ரூ.1,500 கோடி மோசடி

புதுடில்லி: கடந்த ஆறு மாதங்களில், இந்தியாவின் பல முக்கிய நகரங்களில், 30,000க்கும் மேற்பட்டோர் மோசடி முதலீட்டு திட்டங்களில் பணத்தை செலுத்தி, 1,500 கோடி ரூபாய் இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'சைபர்' பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. 'ஐ4சி' எனப்படும், இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. நாடு முழுதும் நடக்கும் சைபர் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக, மத்திய - மாநில போலீசாரை ஒருங்கிணைக்கிறது. மேலும், சைபர் குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை ஒரே மையத்தில் பகிர்ந்து கொள்ள வசதி ஏற்படுத்துகிறது. இந்த மையம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்படுகிறது. இந்த மையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: கடந்த, ஆறு மாதங்களில் நாட்டின் முக்கிய நகரங்களில் முதலீட்டு மோசடிகள் நடந்துள்ளன. மொத்த மோசடி வழக்குகளில், 65 சதவீதம் பெங்களூரு, டில்லி, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், 30 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நடுத்தர வர்க்கத்தினர். இவர்களிடம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி உள்ளனர். இதை நம்பி, 30,000க்கும் அதிகமானோர் பணத்தை இழந்துள்ளனர். அதன் மதிப்பு, 1,500 கோடி ரூபாய்க்கும் மேல். அதில், 2,829 பேர் மூத்த குடிமக்கள். பெங்களூரைச் சேர்ந்தவர்கள் மட்டும், 390 கோடி ரூபாய் இழந்துள்ளனர். 'வாட்ஸாப், டெலிகிராம்' மற்றும் புதிய செயலிகள், இணையதளங்கள் போன்றவை மூலம் பொது மக்களை மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை நம்பி பணம் செலுத்தி மக்கள் ஏமாந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி