மேலும் செய்திகள்
மதுரையில் மாதம் ஐம்பது புதிய எய்ட்ஸ் நோயாளிகள்
12-May-2025
புதுடில்லி:உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 31 வயது, 254 கிலோ நபருக்கு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.பெயர் குறிப்பிடப்படாத அந்த உ.பி., நபருக்கு, கடந்த மாதம் 30ல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. 'சூப்பர் - சூப்பர் ஒபீஸ்' என்ற பிரிவில், 254 கிலோ எடையில் இருந்த அந்த நபரின் 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' எனும், பி.எம்.ஐ., அளவு 75.5 ஆக இருந்தது.சிறு வயதில் இருந்தே உடல் நலத்தில் அக்கறை இல்லாமல், கண்டதையும் சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்து வந்த அந்த நபருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் தான், அவரின் உடல் எடை, உயிருக்கு ஆபத்தாக மாறும் என கூறப்பட்டது.அதையடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் மஞ்சுநாத் மாருதி பால் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவரின் வயிறு மற்றும் குடல் கொள்ளளவு வெகுவாக குறைக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட ஹார்மோன் பிரச்னைகளை, அதற்கான டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:சூப்பர் - சூப்பர் ஒபீஸ் பிரிவில் சிகிச்சை பெற்ற அந்த நபருக்கு, வழக்கமான உடல் எடை குறைப்பு சிகிச்சை முறைகளை அளிக்க முடியாது. 'பேரியாட்டிரிக் சர்ஜிரி' ஒன்று தான் தீர்வு. அதுவும் மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சையின் போது, பல தரப்பட்ட மருத்துவ வல்லுனர்கள், உணவு கட்டுப்பாட்டாளர்கள், அந்த துறையில் வல்லுனர்கள், மனநல ஆய்வாளர்கள், பிசிகல் தெரபிஸ்டுகள் எனும் உடல் தசை வல்லுனர்களும் அந்த அறையில் தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பின், அந்த நபர் முழு உடல் நலத்துடன் உள்ளார். எனினும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். இப்போது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு டாக்டர் கூறினார்.மேலும், 'எந்த நேரமும் அறுவை சிகிச்சை தோல்வி அடையலாம்; அவரின் உடல் நலத்தை பொறுத்தே சிகிச்சை அமையும்' என அந்த நபரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது என்ற தகவலையும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழு கூறியது.
12-May-2025