உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரூ.1.40 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட 37 நக்சல்கள் தெலுங்கானாவில் சரண்

 ரூ.1.40 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட 37 நக்சல்கள் தெலுங்கானாவில் சரண்

ஹைதராபாத்: பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், 1.40 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த, 37 நக்சல்கள் தெலுங்கானா போலீசாரிடம் நேற்று சரண் அடைந்தனர். மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்களை முற்றிலுமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி அவர்களை சுட்டுக்கொன்றும், கைது செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாநில கமிட்டி உறுப்பினர்கள் மூவர், டிவிஷனல் கமிட்டி உறுப்பினர்கள் மூவர், பகுதி கமிட்டி உறுப்பினர்கள் ஒன்பது பேர், சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த, 22 பேர் என மொத்தம், 37 நக்சல்கள் போலீசில் நேற்று சரண் அடைந்தனர். இது குறித்து தெலுங்கானா டி.ஜி.பி., சிவதார் ரெட்டி கூறியதாவது: சரணடைந்த சம்பையா, நாராயணா ஆகியோர் தலைக்கு தலா, 20 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர். சரண் அடைந்த, 37 நக்சல்களையும் பிடித்து கொடுப்பவர்களுக்கு, 1.40 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கொய்யாடா சம்பையா, 49, அப்பாசி நாராயணா, 70, முசாகி சோமடா ஆகியோர் மாநில நக்சல் கமிட்டி உறுப்பினர்கள். இதில் சம்பையா, நாராயணா ஆகியோர் தெலுங்கானா கமிட்டியை சேர்ந்தவர்கள். சரண் அடைந்த, ஒன்பது மண்டல கமிட்டி உறுப்பினர்களில் கணபதி, மல்ல ராஜி ரெட்டி, திப்ரி திருப்பதி, ஹனுமந்து, நாராஹரி ஆகிய ஐந்து பேர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். தொடர்ச்சியான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கொள்கை வேறுபாடுகள், அமைப்பு ரீதியான பிளவுகள் போன்ற காரணங்களால் சரண் அடைவது தாமதம் ஆனதாக நக்சல்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ