15 - -18 வரை 4 நாட்கள் நிலக்கடலை கண்காட்சி
பெங்களூரு; பாலகா என்ற அமைப்பு சார்பில் நாளை துவங்கி, 18ம் தேதி வரை மல்லேஸ்வரத்தில், நான்கு நாட்கள் நிலக்கடலை கண்காட்சி நடக்கிறது.இது குறித்து, பாலகா அமைப்பின் தலைவர் பி.கே.சிவராம் கூறியதாவது:இந்த வருட நிலக்கடலை கண்காட்சி பிளாஸ்டிக் இல்லாமலும், விவசாயிகளுக்கு ஏற்றவாறு இருக்கும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளையும், காகிதப் பைகளையும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். விற்பனையாளர்களுக்கு 40,000 காகிதப் பைகள் வழங்கப்படும்.நிலக்கடலைத் திருவிழா நடத்துவதன் பின்னே நாட்டுப்புற கதை ஒன்று உள்ளது. நிலக்கடலை விவசாயிகள், தங்களது அறுவடையை பாதுகாக்க பசவாவை தொழுவர். வயலுக்குள் சீறி பாய்ந்து வரும் காளைகளை விரட்ட பசவாவை வேண்டி, தாங்கள் அறுவடை செய்த நிலக்கடலையின் முதல் விளைச்சலை படையலிடுவர். அதுவே, நிலக்கடலை திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.பெங்களூரு கிராமம், துமகூரு, கோலார், சிக்கபல்லாப்பூர் மட்டுமல்லாமல், ஆந்திரா, தமிழக விவசாயிகளும் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். விதவிதமான நிலக்கடலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும்.வரும் 25ம் தேதி நடக்கும் வரலாற்று சிறப்புமிக்க பசவனகுடி கடலைத் திருவிழாவுக்கு முன்னோட்டமாக வரும் 15 முதல் 18ம் தேதி வரை, மல்லேஸ்வரத்தில் நான்கு நாட்கள் நிலக்கடலை கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.