4,000 என்.சி.இ.ஆர்.டி., போலி புத்தகங்கள் பறிமுதல்
சமய்பூர் பத்லி: வடக்கு டில்லியில் 4,091 திருட்டு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை பறிமுதல் செய்த போலீசார், ஒருவர் கைது செய்தனர்.சமாய்பூர் பத்லியில் உள்ள ஒரு கடையில் திருட்டு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் சேமித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கடையில் 12ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு திருட்டு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 4,091 திருட்டு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுதொடர்பாக கடை உரிமையாளரான ரோஹிணியில் செக்டார் 16ல் வசிக்கும் அரவிந்த் குப்தா, 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்.டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பல்வேறு அச்சகங்களில் இருந்து போலி புத்தகங்களை வாங்கி, அவர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 63 மற்றும் 65ன் கீழ் அரவிந்த் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.