பாலக்காடு: மொபைல்போன்கள், சமூகஊடகங்கள் மற்றும் இணையதளத்தின் தவறான பயன்பாடு காரணமாக, கேரள மாநிலத்தில் 4 ஆண்டுகளில், 41 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக, மாநில குற்றப்பதிவேடு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலத்தில், மொபைல்போன், சமூகவலைதளங்களின் ஆதிக்கத்தால், 'டிஜிட்டல் போதை'க்கு அடிமையாகி, கடந்த நான்கு ஆண்டுகளில் 41 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, மாநில குற்றப்பதிவேடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பது: கடந்த, 2021 முதல் நடப்பாண்டில் தற்போது வரையிலான காலத்தில், மாநிலத்தில் 'டிஜிட்டல் போதை' தொடர்பான பிரச்னைகளால், 41 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில், மொபைல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக, 1,992 குழந்தைகள் மாநிலத்தில் உள்ள மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், அதிகம் பாதித்தது பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் ஆறு மறுவாழ்வு மையங்கள் உள்ளன. கொல்லம் மாவட்டத்தில் உள்ள மையத்தில், 480 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். கோழிக்கோடு - -325, திருச்சூர் - -304, கொச்சி - -300, திருவனந்தபுரம்- - 299, கண்ணூர்- - 284 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 'ஆன்லைன்' விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களின் அதிக பயன்பாட்டில் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மொபைல்போன்கள் உட்பட விலை உயர்ந்த டிஜிட்டல் சாதனங்களை பரிசளித்து, போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல் தவறாக பயன்படுத்தியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.