கத்தி முனையில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கைது
புதுடில்லி:துவாரகாவில் கத்தியைக் காட்டி மிரட்டி 25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் உள்ள கிரான் ஸ்பிரிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாளர் அங்கித் சிங். இந்த நிறுவன ஊழியர் பிரமோத் குமார். கடந்த 22ம் தேதி, புதுடில்லி துவாரகா 10வது செக்டார் மெட்ரோ ரயில் நிலையத்தில் 15 லட்சம் ரூபாயை வசூலித்து, துவாரகா 8வது செக்டாரில் உள்ள அமன் சவுகானிடம் ஒப்படைக்குமாறு, பிரமோத்திடம் அங்கித் சிங் கூறினார்.அதேபோல, பிரமோத் காமத்திடம் இருந்து பணப்பையை வாங்கிக் கொண்டு அமன் சவுகான் தன் காருக்குச் சென்றபோது, அங்கு வந்த இருவர் அமன் சவுகானை சரமாரியாகத் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணப்பையை பறித்துச் சென்றனர்.துவாரகா போலீசில் சவுகான் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.மேலும், பிரமோத் குமார் காமத்திடம் விசாரித்த போது, முண்ணுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறினார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனிப்படை போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.கடன் தொல்லையால் அவதிப்பட்ட பிரமோத் குமார் காமத், தன் நண்பர்களான சுபாஷ் மற்றும் சோட் லால் ஆகியோருடன் சேர்ந்து, தன் நிறுவனத்தில் இருந்து பணம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரைச் சேர்ந்த சூரஜ் மற்றும் புதுடில்லி நரைனா அருகே லோஹா மண்டியைச் சேர்ந்த ரவீந்தர் மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரையும் இந்தக் கொள்ளை திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.கடந்த 22ம் தேதி, பணப் பையைப் பெற்ற பிறகு, தன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள், சவுகானிடம் கொள்ளையடித்துக் கொண்டு ரவீந்தரின் காரில் ஏறி தப்பியுள்ளனர்.பிரமோத் குமார் காமத்,36, சோட் லால்,25, சுபாஷ்,23, சூரஜ் குமார்,28, ரவீந்தர் குமார்,25, கவுரி சங்கர்,23, ஆகிய ஆறு பேரையும் கைது செய்த போலீசார், 24.5 லட்சம் ரூபாய் பணம், கார் மற்றும் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.