புதுடில்லி: நம் நாட்டின் மேற்கு எல்லையையொட்டிய நகரங்களை குறி வைத்து, ட்ரோன் தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானின் ஆறு விமானப்படை தளங்களை நேற்று நம் படையினர் தகர்த்தனர். மேலும், இரண்டு முக்கிய ரேடார் மையங்களும் அழிக்கப்பட்டன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற ராணுவ நடவடிக்கையை நம் ராணுவம் துவங்கியது. பாக்.,கில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, நம் நாட்டின் மேற்கு எல்லையையொட்டிய பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணை தாக்குதல்களை பாக்., நடத்தியது. ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - -காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், 26 இடங்களில், இந்த தாக்குதல்கள் நீடித்தன. எனினும், பாக்., அனுப்பிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நம் படையினர் வழிமறித்து தாக்கி அழித்தனர். இதையடுத்து, வான்வெளி தாக்குதல்களுக்காக பாக்., பயன்படுத்தி வந்த விமானப்படை தளங்களை குறி வைத்து, நேற்று அதிகாலையில் நம் படையினர் அதிரடி தாக்குதல்களை நடத்தினர். இதில், பாகிஸ்தானின் ஆறு விமானப்படை தளங்கள் மற்றும் இரண்டு ரேடார் மையங்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் குறித்து நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, விமானப்படை விங் கமாண்டர் வியாமிகா சிங், ராணுவ கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் கூறியதாவது:ஜம்மு - -காஷ்மீரின் ஸ்ரீநகர், அவந்திபுரா, உதம்புர் மற்றும் பஞ்சாபின் சில இடங்களில் மருத்துவமனை, பள்ளி போன்ற இடங்களை குறி வைத்து கோழைத்தனமான தாக்குதலில் பாக்., ஈடுபட்டது. இதையடுத்து, பாக்.,கில் இருந்து நீண்டதுார ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவும் இடங்களை கண்டறிந்து நம் படையினர் பதிலடி கொடுத்தனர். இதன்படி, பாக்.,கின் விமானப்படை தளங்களான ரபிகி, முரித், நுார்கான் எனப்படும் சக்லாலா, ரஹிம் யர் கான், சுக்கர், சூனியான் ஆகியவற்றில் நம் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. அங்குள்ள கட்டுப்பாட்டு மையங்கள், ஆயுதக் கிடங்குகள், ரேடார் தளங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. இதுபோல, பாக்.,கின் பாஸ்ரூர், சியால்கோட் ஆகிய இடங்களில் உள்ள ரேடார் மையங்களும் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில், பாக்.,கின் பெரும்பாலான வான் பாதுகாப்புக் கருவிகள் அழிக்கப்பட்டன. நம் தரப்பில் உதம்புர், பதான்கோட், ஆதம்புர், புஜ் ஆகிய இடங்களில் விமானப்படை தளங்களில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. மேலும் ஜம்மு, சம்பா, உதம்பூர், குப்வாரா, நக்ரோட், அவந்திபோரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, அக்னுார், பதன்கோட், அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் பாக்., ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தன. அவற்றை நம் விமானப்படையினர் வழிமறித்து தாக்கி அழித்தனர். ஜம்மு - -காஷ்மீரில் பாக்., அத்துமீறி தாக்கியதில், சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. அதில், பாக்., தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளுக்கும் இடையே, போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தை மும்முரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.
தேர்வு செய்தது ஏன்?
நம் நாட்டின் பஞ்சாப் மற்றும் ஜம்மு - -காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு, இந்த ஆறு விமானப்படை தளங்கள் தான், பாக்., படையினருக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. இதனால் தான், இந்த இலக்குகளை மிகக் கவனமாக தேர்வு செய்ததாகவும், பாக்.,கின் வான்வழித் தாக்குதல்களை முடக்குவதை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார். இந்த தாக்குதல்களின் போது, மிகத் துல்லியமாக ரேடார் தளங்கள் மீது வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நம் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான, 'எஸ் -400' கருவியை ஆதம்புரில் அழித்ததாகவும், சூரத், சிர்சா விமானப்படை தளங்கள், நக்ரோட்டாவில் 'பிரம்மோஸ்' ஏவுதளம், டெஹ்ராங்யாரியில் பீரங்கி நிலைகள், சண்டிகரில் வெடிமருந்து கிடங்கு ஆகியவற்றை அழித்ததாகவும் பொய் தகவல்களை பாக்., பரப்பியது. உள்நோக்கத்துடனேயே, இதுபோன்ற பொய்களை பாக்., கூறுகிறது,” என்றார்.