| ADDED : பிப் 15, 2025 06:52 AM
புதுடில்லி: 'இண்டி' கூட்டணி தொடர 65 சதவீத பேர் விரும்புகிறார்கள் என்பது தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இண்டி கூட்டணி 234 தொகுதிகளை பிடித்தது. இந்த சூழலில், இன்றைய தேதியில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தி இண்டியா டுடே மற்றும் சிஓட்டர் மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.இந்நிலையில், இண்டியா டுடே, சி வோட்டர் இணைந்து புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. ஜனவரி 2ம் முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் 1,25,123 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. அதன் படி, 'இண்டி' கூட்டணி தொடர 65 சதவீத பேர் விரும்புகிறார்கள் என்பது தெரியவந்தது. இருப்பினும், கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்று கருத்தை தெரிவித்தனர். 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க மிகவும் பொருத்தமான தலைவர் யார் என்று கேட்டபோது, காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு 24 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 14 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 சதவீத பேரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்க்கு 6 சதவீத பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 'இண்டி' கூட்டணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழி நடத்த வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதற்கு 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு மம்தா நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.