3ம் கட்டத்தில் 69 % ஓட்டுப்பதிவு 8ம் தேதி எண்ணிக்கை
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் நேற்று நடந்த மூன்றாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலில், 68.72 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஜம்மு - காஷ்மீரில், 10 ஆண்டுகளுக்கு பின் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 24 தொகுதிகளுக்கு, செப்., 18ல் நடந்த முதற்கட்ட தேர்தலில், 61.38 சதவீத ஓட்டுகளும்; 26 தொகுதிகளுக்கு, செப்., 25ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 57.31 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.இந்நிலையில், குப்வாரா, பாரமுல்லா, பந்திபோரா, உதம்பூர், கதுவா, சம்பா, ஜம்மு ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில், மூன்றாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல், நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. ஓட்டுப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடந்ததாக குறிப்பிட்ட தேர்தல் கமிஷன், மூன்றாம் கட்ட தேர்தலில், 68.72 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவித்தது.அதிகபட்சமாக, உதம்பூர் மாவட்டத்தில், 72.91 சதவீத ஓட்டுகளும்; குறைந்தபட்சமாக, பாரமுல்லா மாவட்டத்தில், 55.73 சதவீத ஓட்டுகளும் பதிவாகின. மூன்று கட்ட தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், வரும் 8ல் எண்ணப்பட உள்ளன. பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், காங்கிரசுடன் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வைத்துள்ளதால், மும்முனை போட்டி நிலவுகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.