ஆந்திரா சிம்மாச்சலம் கோவிலில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் சிம்மாச்சலத்தில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின், 20 அடி நீள பெரிய சுற்றுச்சுவர் நேற்று இடிந்து விழுந்ததில், ஏழு பக்தர்கள் உயிரிழந்தனர். ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ளது சிம்மாச்சலம். இங்கு புகழ்பெற்ற வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சந்தனோத்சவம் நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த கோவிலில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம சுவாமியின் சிலை மீது, ஆண்டு முழுதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். அட்சய திரிதியை அன்று மட்டும் சந்தனம் அகற்றப்பட்டு, நரசிம்மர் காட்சி தருவார். இந்த சிறப்பு தரிசனம் நேற்று நடந்தது. இதை காண, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, சிம்மகிரி பேருந்து நிறுத்தம் அருகே, 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற ஏராளமானோர் நின்றிருந்தனர். அவர்கள் மீது 20 அடி நீளம், 6 அடிக்கும் அதிகமான உயரம் உடைய கருங்கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கினர். அந்த சமயத்தில் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா கோவிலினுள்ளே இருந்தார்.தகவல் அறிந்த அவர், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார். இடிபாடுகளில் சிக்கி ஏழு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சுவர் விழுந்ததாக கூறப்படுகிறது மேலும் விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 25 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்ததுடன், 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் அறிவித்துள்ளார்.