காதலனை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த காதலி உட்பட 7 பேர் கைது
கோரமங்களா: காதலனை கடத்தி 5 லட்சம் ரூபாய் பறித்த, காதலி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்தவர் சிவா, 29. மருந்தகம் நடத்தி வருகிறார். இவருக்கு 'பேஸ்புக் மூலம் நெல்லுாரின் மோனிகா, 25 என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் மொபைல் போனில் பேசி வந்தனர். நாளடைவில் காதல் ஏற்பட்டது.'பெங்களூரு கோரமங்களாவில் வேலை செய்கிறேன். என்னை பார்க்க வாருங்கள்' என்று சிவாவை, மோனிகா அழைத்து உள்ளார். அதன்படி கடந்த 22ம் தேதி காலை நெல்லுாரில் இருந்து பெங்களூருக்கு சிவா பஸ்சில் வந்தார்.அவரை, துமகூரின் பாவகடாவில் இறங்கும்படி மோனிகா கூறினார். அங்கு இறங்கிய சிவாவை, காரில் வந்து மோனிகா அழைத்து சென்றார்.பின், பாவகடாவில் உள்ள ஒரு வீட்டில், சிவா சிறைவைக்கப்பட்டார். மோனிகாவின் கூட்டாளிகள் ஆறு பேர் சிவாவை தாக்கி அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 60 கிராம் தங்க நகைகளை பறித்துள்ளனர்.பின், இரவில் பெங்களூரு அழைத்து வந்துள்ளனர். கோரமங்களாவில் உள்ள ஏ.டி.எம்., முன்பு காரை நிறுத்தினர். அப்போது சிவாவுக்கும், மோனிகாவுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.அப்போது அங்கு ரோந்து வந்த கோரமங்களா போலீசார் விசாரித்த போது, சிவாவை கடத்தி பணம் பறித்தது தெரிந்தது. இதையடுத்து மோனிகா, அவரது கூட்டாளிகளான ஹரிஷ், ஹரி கிருஷ்ணா, நரேஷ், ராஜ்குமார், நரசிம்மா, அஞ்சனலு ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது.இதுகுறித்து தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சாரா பாத்திமா கூறுகையில், ''ஆந்திராவை சேர்ந்த மருந்தக உரிமையாளரை கடத்தி 5 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் இளம்பெண் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளோம்.''இவர்களில் இருவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. மற்றவர்கள் மீது எதுவும் வழக்கு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. ''கைதானவர்கள் அனைவரும் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் ஹனி டிராப் கும்பலை சேர்ந்தவர்களா என்றும் விசாரித்து வருகிறோம்,'' என்றார்.