| ADDED : செப் 24, 2024 10:19 AM
பாட்னா: கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாட்னாவில் உள்ள 76 பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் இடைவிடாத மழை கொட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள், மழையின் காரணமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 12 மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து, அபாய அளவை கடந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களை மூடுமாறு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள 76 பள்ளிகளுக்கு வரும் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மாநில பேரிடர் துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என்று கருதக்கூடிய சரன், வைஷாலி, பெகுசாராய் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.