நிலச்சரிவில் சிக்கிய 76 வீரர்கள் மீட்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
காங்டாக்: சிக்கிம் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த, 76 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த 1ல் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு வாகன போக்குவரத்து தடை பட்டது. பலத்த மழையால் லாசேன், லாச்சுங், சுங்க்தங் போன்ற நகரங்களில், 1,600 சுற்றுலா பயணியர் சிக்கி தவித்தனர். அவர்களை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்டனர். பல்வேறு இடங்களில் சிக்கி தவித்த, 140 சுற்றுலா பயணியர், ஹெலிகாப்டர்கள் வாயிலாக மீட்கப்பட்டனர்.இந்நிலையில் சாட்டன் ராணுவ முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்; நான்கு வீரர்கள் காயம் அடைந்தனர்; மேலும் ஆறு வீரர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதைத்தொடர்ந்து, முகாமில் சிக்கி தவித்த, 76 ராணுவ வீரர்கள், நம் விமானப்படைக்கு சொந்தமான மூன்று எம்.ஐ. - 17 ரக ஹெலிகாப்டர்கள் வாயிலாக மீட்கப்பட்டு பாக்யாங் விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். சாட்டன் பகுதியில் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.