உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைபர் குற்றவாளிகளின் போலி வங்கி கணக்கு 8.50 லட்சம்!: நாடு முழுதும் 700 கிளைகளில் திறந்து மோசடி

சைபர் குற்றவாளிகளின் போலி வங்கி கணக்கு 8.50 லட்சம்!: நாடு முழுதும் 700 கிளைகளில் திறந்து மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சைபர்' மோசடிகள் வாயிலாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை, நாடு முழுதும், 700 வங்கி கிளைகளில், 8.50 லட்சம், 'மியூல் அக்கவுன்ட்' எனப்படும், போலி வங்கிக் கணக்குகள் வாயிலாக, 'சைபர்' குற்றவாளிகள் பரிமாற்றம் செய்துள்ளது சி.பி.ஐ., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பங்கள் பெருக பெருக, மோசடி செய்யும் முறைகளும் மாறி வருகின்றன. வீடு தேடி வந்து திருடிய கும்பல், இப்போது, ஓரிடத்தில் சொகுசாக அமர்ந்து கொண்டு, தங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தி, 'டிஜிட்டல்' குற்றங்களை அரங்கேற்றி வருகின்றன.குறிப்பாக, மொபைல் போன், மடிக்கணினி போன்றவற்றின் உதவியுடன் அரங்கேறும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் சைபர் குற்றங்களாக கருதப்படுகின்றன. 9 பேர் கைதுடிஜிட்டல் முறையில் ஒருவரை கைது செய்வதாக மிரட்டி, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில் சாமானியர்களை முதல் தொழிலதிபர்கள் வரை ஏமாற்றி பணம் சுருட்டுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு ஆள்மாறாட்டம், டிஜிட்டல் திருட்டு, மோசடி முதலீடுகள், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளத்தில் அரங்கேற்றப்படும் மோசடி போன்றவை வாயிலாக பெறப்படும் ரூபாய், 'மியூல்' எனப்படும் போலி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன. நிழல் கணக்கு, சட்டவிரோத கணக்கு என பல பெயர்களில் இந்த கணக்கு துவங்கப்படுவதே, பணமோசடியை குறிவைத்துதான் என ஆதாரங்கள் சொல்கின்றன. அவ்வாறு துவங்கப்படும் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் பணம், உடனடியாகவே அடுத்தடுத்து பல்வேறு கிளை கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின், யாராலும் உபயோகப்படுத்த முடியாமல், அந்த கணக்குகள் கேட்பாரற்று கிடக்கின்றன. டிஜிட்டல் மோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, சி.பி.ஐ., அமைப்பின் வாயிலாக இது தொடர்பான விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளது. நாடு முழுதும் அரங்கேறிய டிஜிட்டல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், ராஜஸ்தான், டில்லி, ஹரியானா, உத்தராகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில், 42 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள், மொபைல் போன்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள், முகவர்கள், வங்கி ஊழியர்கள் என ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நாடு முழுதும், 700 வங்கி கிளைகளில் 8.50 லட்சம் மியூல் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகம்இதுகுறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:டிஜிட்டல் மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள், முதலில் தனி நபர், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் வங்கி கணக்கு விபரங்களை, முன்னாள் மற்றும் தற்போது பணிபுரியும் வங்கி ஊழியர்கள் வாயிலாக தெரிந்து கொள்கின்றனர். அந்த வங்கி கணக்குகளுக்கு சொந்தக்காரர்களுக்கு தெரியாமலேயே அவர் பெயரில் போலி கணக்கு துவங்கி, ஏமாற்றி பெறப்படும் பணத்தை அந்த கணக்கில் பெறுகின்றனர். உடனடியாக அந்தப் பணம் பல்வேறு கிளை கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. அதன்பின் அந்த கணக்கு கேட்பாரற்ற கணக்காக மாறுகிறது. அதனால், அந்த வங்கிக் கணக்கை வைத்து விசாரணை நடத்தினாலும் சைபர் குற்றவாளிகளை புலனாய்வு அமைப்புகளால் நெருங்க முடிவதில்லை. நாடு முழுதும் உள்ள பல்வேறு வங்கிகளின் 700க்கும் மேற்பட்ட கிளைகளில், 8.50 லட்சத்துக்கும் அதிகமான மியூல் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கை துவங்கும் போது, வாடிக்கையாளர் தொடர்பான கே.ஒய்.சி., விபரங்களை வங்கி நிர்வாகம் முறையாக பின்பற்றாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வங்கி ஊழியர்களின் உதவியுடனேயே இந்த சட்டவிரோத கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டது தொடர்பாக, சில கிளைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூன் 27, 2025 15:54

சௌக்கிதா.......ர் நு யாரும் இல்லை போலிருக்கு.


ஜான் குணசேகரன்
ஜூன் 27, 2025 09:17

இப்போதெல்லாம் வங்கிகள் நேரடியாகவே மினிமம் பேலன்ஸ், பர்சனல் லோன், கிரிடிட் கார்டு, ஹவுசிங் லோன் பிராசசிங் சார்ஜ் தள்ளுபடி, டிபால்ட் சார்ஜ், அக்கவுண்ட் மெயிட்டனஸ் சார்ஜ், கன்வீனியன்ஸ் சார்ஜ், கோல்டன் அக்கவுண்ட், பிளாட்டினம் அக்கவுண்ட் போன்ற பல விதமான பெயர்களை சொல்லி மோசடி வேலைகளை செய்து வருகிறது. பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கில் கூட பணம் பிடித்துக்கொண்டு வாடிக்கையாளர்களை ஏழைகளை அலைய விடுகிறார்கள். இன்றைய எம்பிஏ, சிஎஃப்ஏ போன்ற படித்த இளைஞர்கள் ஷேர் மார்க்கெடை பார்த்து வேலை செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முயல்வதில்லை. ஆன்லைன் மோசடிக்கு எல்லா விதமான உதவியும் செய்பவர்கள் வங்கி பணியாளர்கள் தான். அவர்கள் உதவி இல்லாமல் 8.50 லட்சம் வங்கி கணக்குகள் உருவாக்க முடியாது


அப்பாவி
ஜூன் 27, 2025 08:16

கணக்கில் பத்து ரூவா குய்ட இல்லாத பரதேசிக்கு எப்பிடி கணக்கில் கோடியில் டிபாசிட் ஆவது? ரிசர்வ் பேங்க், மற்ற பேங்குகள் யோசிக்காதா? எவன் கிட்டேயோ சாஃப்ட் வேர் வாங்கி வெச்சு வண்டிய ஓட்டறாங்க. நாம போனா மட்டும் KYC கொண்டா, ஆதார் கொண்டா, பான் கார்டோட லிங்க் பண்ணியா, மொபைல்ல OTP வந்திச்சா ந்னு தாளிச்சு எடுப்பாய்ங்க.


R.RAMACHANDRAN
ஜூன் 27, 2025 07:42

வங்கிகளில் பணிபுரிவோர் செய்யும் குற்றங்கள் வளர்ந்து கொண்டுள்ளன. அவர்கள் ஒற்றுமையைப் பார்த்து அரசு அச்சப்படுவதால் இந்நிலை.


பேசும் தமிழன்
ஜூன் 27, 2025 07:27

என்னையா கதை விடுகிறீர்கள் ...முதன்முதலில் பணம் போடும் கணக்கு போலியாகவே இருக்கட்டும் ....அந்த கணக்கில் இருந்து பிரித்து அனுப்பப்படும் கணக்கு யாருடையது என்று தெரியத்தானே செய்யும் .


Kasimani Baskaran
ஜூன் 27, 2025 03:48

வங்கியில் உள்ளோர் உதவியில்லாமல் இது போன்ற ஒருவரது உண்மையான அடையாளத்தை வைத்து வேறு ஒருவர் கணக்கு ஆரம்பிக்க முடியாது. ஆகவே மோசடி செய்ய உதவிய வங்கியிடம் இருந்து அந்த நஷ்டத்தை வாங்கிவிடலாம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை