முதல்வரின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்
ராம்நகரின் சென்னப்பட்டணா ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, பல்லாரி சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த துக்காராம், ஹாவேரி ஷிகாவி பா.ஜ., -- எம்.எல்.ஏ.,வாக இருந்த பசவராஜ் பொம்மை ஆகியோர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.காலியாக இருக்கும் 3 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் சார்பில் சண்டூர், ஷிகாவி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். சென்னப்பட்டணாவுக்கு இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் மூன்று தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.தேர்தல் தேதி அறிவித்தவுடன், மூன்று தொகுதிகளையும் தக்கவைக்கும் முயற்சியில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.சண்டூரை தக்கவைப்பது மட்டுமின்றி, சென்னப்பட்டணாவையும் கைப்பற்ற வேண்டும் என்று துணை முதல்வர் சிவகுமார் முயற்சி செய்து வருகிறார். சென்னப்பட்டணவை கைப்பற்றி, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு 'ஷாக்' கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை.பொதுவாக இடைத்தேர்தல் நடந்தால், ஆளும்கட்சி தான் வெற்றி பெறும் என்ற மாயை உள்ளது. அந்த மாயையை மாற்றி அமைக்க வேண்டும் என, பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி கட்சியினர் கருதுகின்றனர்.சண்டூரில் இதுவரை பா.ஜ., வெற்றி பெற்றது இல்லை. இந்த முறையாவது வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றினால், முதல்வர் சித்தராமையாவின் மவுசு இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. முதல்வர் பதவிக்கு ஆபத்தின்றி தப்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் வேட்பாளர்கள் தேர்வில் அவர் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.ஆனால் பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி தலைவர்களோ, காங்கிரசை தோற்கடிக்க முற்பட்டு உள்ளனர். யாருக்கு மலர் மாலை என்பது, மக்கள் கையில் உள்ளது. - -நமது நிருபர் -