| ADDED : பிப் 10, 2024 11:28 PM
ஆக்ரா, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே யமுனை ஆற்றில் உயிருக்கு போராடிய, 16 வயது சிறுமியை சமீபத்தில் உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இது குறித்து போலீசார் கூறியதாவது:அலிகாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன் வீட்டின் அருகே ஆண் நண்பர் ஒருவருடன் பேசியுள்ளார். இதை பார்த்த அவரது தந்தை, மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அதற்கு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.அதன்பின், மகளிடம் குருகிராமுக்கு சென்று வரலாம் என கூறி, ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். உடன் சிறுமியின் மாமாவும் வந்துள்ளார். பாம்ரோலி கட்டாரா என்ற பகுதிக்கு சிறுமியை அழைத்து வந்த அவர்கள், மப்ளரால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர். அவர் கூச்சல் போடவே, இருவருமாக சேர்ந்து சிறுமியை துாக்கி யமுனை ஆற்றில் வீசிவிட்டு தப்பி ஓடினர். ஆற்றில் விழுந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர், அவரை பத்திரமாக மீட்டனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அவரது தந்தை மற்றும் மாமா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறோம். சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.