| ADDED : பிப் 26, 2024 07:30 AM
சிக்கமகளூரு: பிரசித்தி பெற்ற முல்லையன கிரி மலையில், மீண்டும் காட்டுத்தீ பரவியதில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.சிக்கமகளூரின் முல்லய்யன கிரி மலை, கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இயற்கை காட்சிகள் நிறைந்த மலைப்பகுதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். மழைக்காலம், குளிர்க்காலத்தில் இங்கு வருவோரின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே, மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. பல இடங்களில் காட்டுத்தீ ஏற்படுகிறது. சமீபத்தில் முல்லய்யன கிரி மலை அடிவாரத்தின், பைரேகுட்டா பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.தீயணைப்பு படையினர், போலீசார், வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.இந்நிலையில் இதே பகுதியில், நேற்று மீண்டும் தீப்பிடித்துள்ளது. பைரேகுட்டாவில் இருந்து, கவிகல் குன்டி வனப்பகுதி வரை, தீ பரவியுள்ளது. நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி வனப்பகுதி தீக்கிரையானது. பைரேகுட்டா உயரமான பகுதியாகும்.முல்லய்யன கிரியில் பலமான காற்று வீசுவதால், தீ வேகமாக பரவுகிறது. கட்டுப்படுத்த முடியாமல், தீயணைப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.